வீதியில் கொட்டப்பட்ட குப்பைகள்; நேற்று அபராதம் விதித்த கலெக்டர் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
மயிலாடுதுறையில் என் "குப்பை எனது பொறுப்பு" குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் விழிப்புணர்வு தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நகரில் பல்வேறு குடியிருப்பு அடுக்குமனை வளாகங்கள் உள்ளன. இவற்றில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சிக்கு வழங்காமல் வீதிகளில் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனை தடுக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாதான தெருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் குப்பைகள் வீதியில் கொட்டப்பட்டு இருப்பதை கண்டு அந்த குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்ட ஹிமானா குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதி மக்களிடம் தங்களது வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவைகளை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். நகராட்சி பகுதியினை குப்பைகள் சேராமல் தூய்மையான பகுதியாக வைத்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும் என தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குடியிருப்பு வளாகம் பொதுமக்கள், நகராட்சி பணியாளர்கள் முழு சுகாதார உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து முழு சுகாதார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை குடியிருப்பு வளாக மக்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “மயிலாடுதுறை நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சைநிற தொட்டியிலும், மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை தனியாகவும் சேகரித்து அவற்றை தினசரி வீடுதோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பச்சைநிற கூடையில் மக்கும் குப்பைகளான உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், தோட்டக்கழிவுகள், மீன் முட்கள், எலும்பு துண்டுகள், வீணான உணவுபொருட்கள், நீலநிற கூடையில் மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பாலித்தீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள், எண்ணெய் கவர்கள், கண்ணாடி பொருட்கள், பயனற்ற எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு மெட்டல், அலுமினியம், தோல் பொருட்கள், தனியாக தரவேண்டிய இதர கழிவுகள் சானிட்டரி நாப்கின், டயப்பர்ஸ், மருத்துவக் கழிவுகள் போன்றவைகளை முறையாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்காமல் சுகாதாரமற்ற முறையில் தனிநபர் வீடு, தொகுப்பு வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு, மொத்த உற்பத்தியாளர்கள் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது அதேபோன்று, குப்பை கழிவுகளை அதற்கென உள்ள இடங்களில் கொட்ட வேண்டும். எனவே, மயிலாடுதுறை தூய்மையான நகராட்சியாக உருவாக அனைத்து தரப்பு மக்களும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தூய்மையான நகரமாக உருவாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
அதனைத்தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போற்றி கவுரவித்தார். பின்னர் நகராட்சி பகுதிக்குட்பட்ட குட்டக்குளம் தெரு, மாப்படுகை சாலை பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் மாவட்ட ஆட்சியர் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குவது தொடர்பாக எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கர், பழனிசாமி, பிருந்தா மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.