TN 12th Result 2023: +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் மாணவி... பாராட்டுகளை பொழிந்த பொதுமக்கள்..!
Tamil Nadu 12th Result 2023 Updates: மயிலாடுதுறை அருகே +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் மாணவியை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் நடைபெற்று. இந்ததேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7,600 பள்ளிகளை சேர்ந்த சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் 8 லட்சம் 3 ஆயிரத்து 385 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 10 -ம் தேதி தொடங்கி நிறைவு பெற்றது. இந்த பணி 79 மையங்களில், 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று தமிழகத்தில் 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5 -ம் தேதி வெளியிட, ஏற்கெனவே தேர்வுத் துறை திட்டமிட்டது. ஆனால், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தாமதம் காரணமாக வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர், மே 7-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. மே 7-ம் தேதி, நீட் தேர்வு நடப்பதால் அதற்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதால் மே 8 -ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, 12ம் பொதுத் தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். மொத்தமாக 94.03 சதவீதம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 93.76 சதவீததம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2வது இடம் திருப்பூர் மாவட்டமும், 3வது இடம் பெரம்பலூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 594 பேரும்,மாணவிகள் 5 ஆயிரத்து 743 பேரும் என மொத்தம் 10 ஆயிரத்து 337 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 977 மாணவர்களும், 5 ஆயிரத்து 342 மாணவிகளும் என 9 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 86.57 சதவீதமும், மாணவிகள் 93.02 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்களை விட மாணவிகள் 7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்துள்ள பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்தினர் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நரிக்குறவ மாணவர்கள் அப்பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். 100 - க்கும்மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 8 -ஆம் வகுப்புவரை தங்கி படித்துவருகின்றனர். பள்ளி நிர்வாக பராமரிப்பில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கணவரால் கைவிடப்பட்டு ஊசிமணிபாசி மணி விற்பனை செய்துவரும் நரிக்குறவர் இன பெண் லதாவின் மகள் உள்ளிட்ட 6 பேர் நீடூரில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் +2 படித்துவந்தனர். மற்றவர்கள் தேர்வு எழுதாத நிலையில் நயன்தாரா மட்டும் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவி நயன்தாராவை உண்டு உறைவிடப்பள்ளி மையத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெண்ணின் தாயார் ஆகியோர் பாராட்டினர்.
இதையடுத்து, “எனது வாழ்க்கை ஊசிமணி பாசிமணி விற்பனையோடு முடிந்துவிட்டது எனது பிள்ளையாவது படித்து வேலைக்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என தாயார் லதா கூறினார். என் தாயார் செய்துவரும் தொழிலையே நானும் செய்யாமல் படித்து அதன்மூலம் வேலையை தேடுவேன் என் தாயாரை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று மாணவி தெரிவித்தார்.