தரங்கம்பாடி அருகே மின்னல் பாய்ந்து உடல் கருகி மீனவர் உயிரிழந்த சோகம்
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் பலியான நிலையில் காயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த குப்புரத்தினம் என்பவரின் மகன் கண்ணபிரான், தனக்கு சொந்தமான பைபர் படையில் தனது அண்ணன் 38 வயதான அருண் மற்றும் மணிவேல், கவிராஜ், சுப்பிரமணியன் ஆகியோருடன் நேற்று தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தற்போது மழை பெய்து வரும் சூழலில் கடற்கரை மாவட்டத்திலும் இடி மின்னலுடன் மழை பெய்து வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை மீன் பிடித்துக் கொண்டு அவர்கள் துறைமுகத்திற்கு திரும்பியுள்ளனர். மற்ற நால்வரும் கரை ஏறிய நிலையில், படகில் இருந்த அருண் மீது மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பக்கத்து படகில் இருந்த குட்டியாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் 48 வயதான ராஜேந்திரன் என்பவர் மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
Diwali Rasi Palan 2023: தீபாவளி ராசிப்பலன்! மகரம், கும்பம், மீன ராசிக்கார்களுக்கு எப்படி?
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் பொரையாறு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்த அருணுக்கு திருமணமாகி ஜான்சி ராணி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மீனவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.