மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் - மீனவர்கள் வைத்த கோரிக்கைகள் என்னென்ன..?
மீனவ கிராமங்களில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர கோரி மீனவர்கள் குறை தீர்க்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றின் வளர்ச்சி குறித்து மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை வகித்து மீனவ மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பவர்பாயின்ட் வாயிலாக மீனவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மீனவர்கள் தங்களது மீனவ கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கவேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து மீனவர்கள் குடிநீர், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் மயான வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 62 மனுக்களை அளித்தனர். மேலும், இக்கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போம் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் வந்த மாற்றுத்திறனாளி மீனவர்கள், தங்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த மீன்பிடி தடை காலத்துக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டதை தமிழக அரசு உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். மீனவர்களிடம் இருந்து பெறப்பட்ட 62 மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்பதன வசதி கொண்ட லாரி ஒன்றை சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். தொடர்ந்து மீனவர் விபத்து குழு காப்புறுதி திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர் இறந்தமைக்கு காப்புறுதி நிவாரணத் தொகை 5 லட்சம் ரூபாயை அவரது வாரிசுதாரரான அவரது தந்தை ஏழுமலை என்பவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆணையையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மீன்வளம் உதவி இயக்குனர் ராஜேஷ்குமார், மீன்வளம் உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயபாலன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.