மனைவி இறந்த மறு கணம் கணவரும் மரணம் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் 51 ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்த மனைவி இறந்த மறுகணம் கணவரும் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா சோழம்பேட்டை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் 84 வயதான சீனிவாசன். இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து கடந்த 2000 ஆண்டு பணி ஓய்வு பெற்றவர். இவருக்கு 81 வயதான விஜயலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் மேலும், வசந்தகோகிலம் என்கிற இரண்டாவது மனைவியும், அவருக்கும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும், ஒரே வீட்டில் ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக இருந்து வருகின்றனர். மேலும் கணவனும், முதல் மனைவியும் இருவருமே எந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கடந்த 51 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்து உள்ளார். அதனைத் தொடர்ந்து மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சீனிவாசன் மனைவியின் உடலை பார்த்தபடியே அமர்ந்த நிலையில் திடீரென மனைவியின் உடல்மீது சாய்ந்து விழுந்து அவரும் உயிரிழந்துள்ளார். மனைவியின் மீது கொண்ட நீங்கா பற்று காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். முன்னாள் ராணுவ வீரர் அவரது மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழும் போதும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் ஒரே நாளில் உயிரிழந்தது கேட்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களால் கூடி பேசி நிச்சயத்து செய்யும் திருமணம் ஆனாலும், பல ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிகளாக இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு சிறிய காரணத்திற்காக பிரிந்து சென்று விவாகரத்து பெரும் இந்த சூழலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கணவன் மனைவி இடையே சண்டை சச்சர வேண்டிய கூடி வாழ்ந்தது மட்டும் இன்றி, இறப்பிலும் ஒன்று சேர்ந்த சம்பவம் பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்