மயிலாடுதுறை அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீ விபத்து
மயிலாடுதுறை அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மின் கம்பியில் உரசி தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சேதமாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1.50 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து நெற்பயிர்கள் தப்பிய நிலையில், தற்போது மாவட்ட முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. மேலும் நெல் அறுவடையில் வரும் வைக்கோல்களை இயந்திரம் கொண்டு வைக்கல் கட்டுகள் கட்டப்பட்டு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த வைக்கோலை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று கும்பகோணத்தை நோக்கி சென்றுள்ளது. அப்போது, திருவிடைக்கழி அடுத்த பெருங்குடி என்ற பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த வைக்கோல் சாலையில் இருந்த மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்தது. வைக்கோலில் பற்றிய தீ மளமளவென பரவி லாரியிலும் தீப்பிடித்தது. இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர், உடனடியாக லாரியை சாலையில் இருந்து இறக்கி வயலில் பாதுகாப்பாக நிறுத்தினார்.
இதனை கண்ட அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு அளித்த புகாரியின் பேரில் திருக்கடையூர் பகுதியில் இருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வைக்கோல் எறிந்து லாரி முழுவதுமாக எரிந்து டயர்கள் வெடித்தும் லாரி முழு சேதம் ஏற்பட்டது. ஜேசிபி எந்திரம் கொண்டும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கிராம மக்களிடையே பரபரப்பு நிலவியது. வைக்கோல் குறிப்பட்ட அளவை கடந்து உயர்வாக அதிக அளவில் ஏற்றிச் சென்றதால் மீன் கம்பியில் வைக்கோல் உரசி இந்த தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்