கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கை - நிறைவேற்றித் தர முதல்வருக்கு வணிகர் சங்கத்தினர் வேண்டுகோள்
’’சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்’’
குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் சோழா சி.மகேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரமேஷ்ராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சென்னை முதல் குமரி வரை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அரசின் முன்களப் பணி துறையினருக்கும் பாராட்டு, நன்றிகள். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வணிகர் சங்க கூட்டமைப்பின் மூலம் கோரிக்கை விடுத்து வருகிறோம். சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வழக்கறிஞர்கள் சங்கமும், சமூக அமைப்புகளும், சர்வ கட்சியினரும் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது அன்றைய எதிர்கட்சி தலைவரும், தற்போதை தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருக்கடையூர், ஒரத்தநாடு ஆகிய இரு இடங்களிலும் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அந்த வகையில் வாக்கு அளித்த வண்ணம் செய்தளிக்க கூடிய பண்பு உடையவரான முதல்வர், புதிய மாவட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக 1991ஆம் ஆண்டுக்கு முன்பும் 1996 ஆம் ஆண்டுக்கு பின்பும் கும்பகோணம் தொகுதி மக்கள் தற்போதைய ஆளும் கட்சிக்கு தொடர்ந்து வாக்களித்து நிலையான வெற்றியை அளித்து வருகின்றனர். ஆகவே கும்பகோணம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சரக்கு சேவை வரியில் மாற்றம் செய்து காலணிகள், ஜவுளிகள் போன்ற வெகு மக்கள் பெரிதும் பயன்படுத்த கூடிய பொருட்களுக்கு 05 % லிருந்து 12 % வரை வரி உயர்த்தப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற வரி உயர்வு எளிய மக்களை பெரிதும் பாதிக்கும். என்பதால் சரக்கு சேவை வரி உயர்வை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
கும்பகோணம் தொழிலாளர் நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளில் பணியாற்றும் ஒரு சிலர் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், சுய லாபம் கருதி வணிகர்களை அச்சுறுத்தல் செய்தும் வருகின்றனர். இத்தகையோரின் அனுகுமுறை மாற வேண்டும். துறைகளிலுள்ளவர்கள் மாற்றமில்லாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் கும்பகோணம்-விருத்தாசலம் இணைப்பு நீடாமங்கலம் புதிய இரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரயில்வே அமைச்சரகத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை, வேதம் முரளி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக வணிகர் சங்கங்களின் மாவட்ட பொருளாளர் கியாசுதீன் நன்றி கூறினார்.