![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Magalir Urimai Thogai: தஞ்சையில் மகளிர் உரிமைத் திட்ட ஏடிஎம் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Kalaignar Magalir Urimai Scheme: ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும்.
![Magalir Urimai Thogai: தஞ்சையில் மகளிர் உரிமைத் திட்ட ஏடிஎம் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Kalaignar Magalir Urimai Scheme Minister Anbil Mahesh Poiyamozhi distributed Women's Rights Scheme ATM cards to beneficiaries in Thanjavur TNN Magalir Urimai Thogai: தஞ்சையில் மகளிர் உரிமைத் திட்ட ஏடிஎம் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/cc4339deb67229887145d8d1d8d27dc91694776562209733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: தஞ்சாவூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஏடிஎம் கார்டுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயனாளிகளுக்கு வழங்கினார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுத்திடவும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கிட ஆணையிடப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான நேற்று காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து. தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:
இத்திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம். தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் அது இதுதான், ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதந்தோறும் பயனடையும் மிகப்பெரிய திட்டமாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை பதிவேற்ற 3,00,093 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 16.08.2023 வரை 2.22,721 விண்ணப்பங்களும் 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 27.055 விண்ணப்பங்களும் ஆகக் கூடுதல் 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களை தகுதியுடையனவாக தேர்வு செய்யப்பட்டு பயன்பெறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு). டி .கே .ஜி நீலமேகம் (தஞ்சாவூர்), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேராவூரணி), மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)