மக்களை மகிழ்விக்கும் மழை... அறுசுவை அசைவ விருந்தை தாங்களே பரிமாறி நெகிழச் செய்த ஜோதி அறக்கட்டளை
எங்களை மதிச்சு என்ன வேணும்ன்னு பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து கவனிக்கும் போது அம்மா நினைவு வந்திடுச்சு என்று ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியுடன் பாதாள சாக்கடை துப்புரவு பணியாளர்கள் கூறினர்

தஞ்சாவூர்:மக்களை மகிழ்விக்க பெய்யும் மழைபோல் மனிதர்கள் மத்தியில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும் தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர் செய்த அற்புதமான செயல் நெகிழ:ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாக்கடையை சுத்தம் பண்ற வேலை செய்யறோம். இந்த மாதிரி பெரிய இடத்துல எங்களை உள்ளே விட மாட்டாங்க. கெட்ட வாடை வரும்னு எங்க பக்கத்துல கூட நிக்க மாட்டாங்க. அவ்வளவு ஏன்? எங்க சொந்தக்காரங்க வீட்ல கூட இப்படி உபசரித்து சாப்பாடு போட மாட்டாங்க. ஆனா யாருன்னே தெரியாத இவங்க எங்களை மதிச்சு எங்களுக்கு என்ன வேணும்ன்னு பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து கவனிக்கும் போது எங்க அம்மா நினைவு வந்திடுச்சு என்று ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியுடன் பாதாள சாக்கடை துப்புரவு பணியாளர்கள் கூறியது எதற்காக? தெரிந்து கொள்வோம் வாங்க.

வீட்டின் முன் கழிவு நீர் வழிந்தோடினால் மூக்கை பொத்தியபடி பழுது பார்க்க சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சரி செய்து வெளியே வரும் துப்புரவு பணியாளருக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மறுத்த கல்நெஞ்சம் கொண்ட மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்த பாதாள சாக்கடை துப்புரவு பணியாளர்களையும் உயர்தர அசைவ உணவகத்துக்கு அழைத்துச் சென்று மட்டன், பார்பிக்யூ சிக்கன், முட்டை, பிரியாணி, இடியாப்பம், பாயா, மீன், புரோட்டா, லாலிபாப், ஐஸ்க்ரீம், பாயாசம் என அட்டகாசமான தடபுடல் விருந்தை அன்புடன் பரிமாறி அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அசத்தியுள்ளனர் தஞ்சை ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவன நிர்வாகிகள் .
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் ஆங்காங்கே ஏற்படும் பாதாள சாக்கடை பழுதை சரி செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். நேற்று ஒரு சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புகளில் ஏற்பட்ட பழுது காரணமாக நகரின் முக்கிய சாலைகளிலும் தெருக்களிலும் கழிவுநீர் வெளியேறி ஓடியது . இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால் வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் , சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர் இந்நிலையில் பாதாள சாக்கடை இணைப்பில் ஏற்பட்ட பழுதை தஞ்சை மாநகராட்சி பாதாள சாக்கடை துப்புரவு பணியாளர்கள் இரவு பகல் பாராமல் போர்க்கால அடிப்படையில் சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது துப்புரவு பணியாளர் ஒருவர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க குடிநீர் தருமாறு பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் கேட்கவே சாக்கடைக்குள் இறங்கி சுத்த செய்த தூய்மை பணியாளரின் தோற்றத்தை பார்த்த அந்த வீட்டில் உள்ளவர்கள் தண்ணீர் தர மறுத்துள்ளனர் .தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதற்கு கூட இந்த தோற்றம் தடுக்கிறது என்று மன வேதனைப்பட்டு தங்களுக்குள் புலம்பியிருக்கிறார்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி பழுதை சரி செய்த துப்புரவு பணியாளர்கள். மற்றவர்கள் நோய் நொடியில் இருந்து பாதுகாக்கும் நமக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுப்பதற்கு கூட மனிதர்கள் யோசிக்கிறார்களே என்ற இவர்களது மனக்குமுறல், வேதனைக்குரல் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமாரை எட்டியது.
யாரோ ஒருத்தர் உங்களுக்கு குடிக்க தண்ணீர் குடுக்க யோசிச்சா என்ன , மக்களின் சுத்தத்துக்கும், சுகாதாரத்துக்கும் பங்களிக்கும் உங்களுக்கு நான் விருந்தே வைக்கிறேன் என்று உடனடியாக பாதாள சாக்கடை பழுது நீக்கும் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தஞ்சையில் உள்ள பிரபல உயர்தர அசைவ உணவகத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் அனைவருக்கும் சந்தானம், குங்குமம், கல்கண்டு, வெற்றிலை, பாக்கு சகிதம் பன்னீர் தெளித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளார் பிரபு ராஜ்குமார்.

அப்புறம்தான் பெரிய நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மட்டன், பார்பிக்யூ சிக்கன், மீன், முட்டை, பிரியாணி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, புரோட்டா, ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், ஐஸ்க்ரீம், இளநீர் பாயாசம் என்று தடபுடலாக அசைவ விருந்தை தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் உட்பட நிர்வாகிகளே பரிமாறியதுதான் ஹைலைட்... நெகிழ்ச்சி.
எங்க சொந்தக்காரங்க கூட இப்படி எங்களை கவனிச்சுக்கிட்டது இல்லைன்னு தூய்மை பணியாளர்கள் எல்லோருமே நெகிழ்ந்து மனம் நிறைந்துள்ளனர். பொதுவா இந்த மாதிரி பெரிய பெரிய இடங்களில் சாக்கடை அடைச்சுகிட்டு வந்து சுத்தம் பண்ணுன்னு தான் கூப்பிடுவாங்க. சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செஞ்சு குடுத்தாலும் ஒரு வாய் தண்ணீர் கூட குடுக்க மாட்டாங்க . அப்படியே கொடுத்தாலும் தள்ளி நின்னு தான் கொடுப்பாங்க.
அடுத்தவங்க சுத்தமா இருக்கணும்னு பாடுபடுற எங்களையே அருவெறுப்பா தான் பார்ப்பாங்க. ஆனா யாருனே தெரியாத எங்களை ஜோதி அறக்கட்டளையை சேர்ந்தவங்க இன்னைக்கு இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து எங்களை அலங்க வீட்டு சொந்தகாரங்க விசேஷத்துக்கு வந்தது மாதிரி அன்போட வரவேற்று பாசத்தோட எங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு பரிமாறி எங்க வயித்தையும் மனசையும் குளிர வைச்சுட்டாங்க ,
இதெல்லாம் பார்த்தப்ப எங்க அம்மா எங்கள கண்ணும் கருத்துமா வளர்த்தது கண்ணுக்குள்ள வந்து ஞாபகப்படுத்தியது. எங்க அம்மா மாதிரி எங்களை இன்னைக்கு பார்த்துகிட்டாங்க என்று உள்ளத்திலிருந்து அந்த தூய்மை பணியாளர்கள் நெஞ்சம் உருக கூறினர். மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வே கிடையாது. அனைவரும் சமம் என்று நிரூபித்த தஞ்சை ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.





















