ஜெயலலிதாவின் மகள் என கூறி வரும் ஜெயலட்சுமி தமிழக மக்களுக்காக சுற்றுப்பயணம்..!
தமிழக மக்களின் நலன், வலி, வேதனை என்பதை தெரிந்துகொள்ள சென்னை - தஞ்சாவூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக ஜெயலட்சுமி என்கிற பிரேமா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. அதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றிய நிலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அலுவலகத்தை அரசு சார்பில் பூட்டு சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து ஓபிஎஸ் தரப்போ எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை மற்றும் மாவட்ட செயலாளர் பலர் என மேலும் 44 பேரை கட்சியை விட்டு நீக்கி பதிலடி கொடுத்தது.
இந்த கலவரத்திற்கு மத்தியில் ஜெயலலிதாவின் மகள் என கூறி வரும் ஜெயலட்சுமி, என்ற பிரபாவை அரசியலுக்கு வருமாறு மண்ணின் மைந்தர்கள் கழகத்தினர் அழைப்பு விடுத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொருத்தராக நான் தான் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்கள், அவர்களின் புகைப்படமும் சமூக வலை தளத்தில் பரவி அதிர்ச்சியை உருவாக்கும். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி, ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி என்கிற பிரபா. இந்நிலையில் இவரை அரசியலுக்கு வருமாறு மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பாக அதன் நிறுவனர் ஆ.சா.செல்வராஜ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆளுயர ரோஜா மாலை அணிவித்தும், பொன்னாடைகள் அணிவித்தும் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், ஜெயலலிதாவின் மகள் ஜெயலட்சுமியை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தோம், அவரும் மண்ணின் மைந்தர்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளதாக கூறினார் என்றார். அதனைத் தொடர்ந்து நேற்று மயிலாடுதுறையில் மண்ணின் மைந்தர்கள் கழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என சொல்லிக்கொள்ளும் ஜெயலட்சுமி என்கிற பிரேமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக மக்களின் நலன், வலி, வேதனை என்பதை தெரிந்துகொள்ள சென்னை - தஞ்சாவூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது தொண்டர்களின் மனநிலையை அறிந்து வருவதாகவும், மக்கள் அம்மா பெயரை காப்பாற்ற நான் அரசியலுக்கு வர வேண்டுமென விரும்புவதாகவும், செல்லும் இடத்தில் எல்லாம் மக்களின் ஆதரவு அதிகமாக காணப்படுகிறது என்றார். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, அமமுக என செயல்பட்டு வரும் நிலையில் ஜெயலட்சுமி அவர் பங்கிற்கு அரசியல் பயணத்தை துவக்க உள்ளதாக கூறியுள்ளது பலரது மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்