பிரதமர் முன் யோகா செய்ய ஆசைப்படும் சீர்காழி மாணவி; உலகளவில் யோகாவில் சாதனை..!
சீர்காழியில் உலக அளவில் யோகாவில் சாதனை புரிந்து தங்கப்பதக்கங்களை குவித்து வரும் கிராமத்து மாணவி சுபானு, பிரதமர் முன் யோகா செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், சீதா தம்பதியினரின் மகள் சுபானு (18) 3 வயது முதல் யோகாவின் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் கல்வி ஒரு கண்ணாகவும், யோகா ஒரு கண்ணாகவும், பயின்று வந்தார். சுபானுக்கு பள்ளிப்பருவத்தில் யோகாவில் பலவிதமான கலைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் அற்புதமாய் செய்து அசத்தினார். சுபானுவின் யோகா திறமையை கண்டு பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் தேவையான ஆக்கமும், ஊக்கமும் அளித்து வந்தனர்.
தொடர்ந்து, சுபானு யோகாவின் சாதனைகள் உலகெங்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சிகள் பல மேற்கொண்டார். அதன் அடிப்படையில் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, அபுதாபி, சவுத் ஆப்பிரிக்கா, தாய்லாந்து போன்ற பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்று யோகாவில் சாதனை படைத்தார். படிப்படியாக யோகாவில் முன்னேற்றம் கண்டு வந்த சுபானுவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இறந்தார்.
இதனால் குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியது, இருப்பினும் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் கிராமத்து பெண்ணாளும், உலக அளவில் சாதனை படைக்க முடியும் என்ற உத்வேகத்தோடு மீண்டும் யோகா பயிற்சியை தொடர்ந்தார். அதன் பயனாக பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னிலையில் தன் யோகா திறமைகளை செவ்வனே வெளிப்படுத்தினார். தன் தாயாரின் சிறு வருமானத்தைக் கொண்டு நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் நேச்சுரோபதி யோகா படித்து வருகிறார்.
உலக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திறம்பட செய்த யோகா பயிற்சியை கண்டு டாக்டர் பட்டம், 270 க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கம் என அள்ளிக் குவித்தார் சுபானு. யோகாவை ஒலிம்பிக் போட்டியில் கொண்டு வர வேண்டும் என்பது சுபானுவின் ஆசையாகும். ஒலிம்பிக்கில் யோகாவை சேர்த்து இந்தியா சார்பில் தான் பங்கேற்று நிச்சயம் தங்கப்பதக்கத்தை வெல்வதில் உறுதியாக இருக்கிறார் என்று தனது கம்பீரக் குரலில் ஆசையை வெளிப்படுத்தினார்.
ஜூன் 21 உலக யோகா தினத்தை அறிவித்து செயல்படுத்திய பிரதமர் மோடியின் முன்பாக யோகா பயிற்சி செய்து காண்பிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் அதன் நற்பலன்கள் பற்றியும் ஐநா சபையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு யோகா பயிற்சியை தொடர்ந்து வருகிறேன் என்றார் சுபானு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்