நன்மை செய்யும் பூச்சிகளின் சரணாலயம் வயல்வெளி; வேளாண்துறை உயர் அதிகாரியின் அறிவுறுத்தல் என்ன?
நன்மை செய்யும் பூச்சிகளின் சரணாலயம் வயல்வெளி; கவனத்துடன் பூச்சி மருந்து தெளிக்க அறிவுறுத்தல்
பூச்சிகளும் வாழ வேண்டும், நாமும் வாழ வேண்டும். வயல்வெளி என்பது பூச்சிகளின் சரணாலயம். பூச்சிகளை பாதுகாத்து செலவினை குறைக்கலாம். என்னது பூச்சிகளை பாதுகாக்கணும்னு சொல்கிறார்களே என்று பார்க்கிறீர்களா. இந்த பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகள்.
விவசாயிகளின் சாகுபடி பயிர்களுக்கு முக்கிய எதிரியே பயிர்களை அழிக்கும் பூச்சிகள்தான். ஆனால் இதில் நன்மை செய்யும் பூச்சிகளும் அதிகம் உள்ளது. இயற்கையின் படைப்பு அப்படி உள்ளது. சாகுபடி பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை உணவாக்கி விவசாயிகளின் நண்பனாக ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவை பற்றி தெரிந்து கொள்வோம்.
வயல்வெளியில் ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளது. இதனை மருந்து அடித்து கொல்லாமல் பாதுகாத்தால் தீமை செய்யும் பூச்சிகள் தானாகவே அழிந்து விடும். தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தெளித்து தீமை செய்யும் இலை சுருட்டு புழு, குருத்துப்புழு, புகையான் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
இதுகுறித்து விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளதாவது:
வயல்வெளி என்பது பூச்சிகளின் சரணாலயம் என்பதை மறந்து விடக்கூடாது. அதில் இயற்கையாகவே நன்மை செய்யும் பூச்சிகள் ஏராளமாக உள்ளன. நன்மை செய்யும் பூச்சிகள் பயிர்களை தின்பது இல்லை. அது உயிர் வாழ தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே தங்களுக்கு உணவாக்கி கொள்கிறது. இதன் மூலம் இயற்கையாகவே தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. தேவை இல்லாமல் பூச்சி மருந்து அடிப்பதன் மூலம் நாமே நன்மை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், பாதுகாப்பாக பயிரின் உள்ளே உள்ள தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கம் அடைகிறது. மேலும் சமசீரற்ற உரங்களை அதிகளவில் இடுவது, தழைச்சத்து கொடுக்கக்கூடிய யூரியாவை தேவைக்கு அதிகமாக இட்டு தீமை செய்யும் பூச்சிகளை கவர்வதும் பயிர் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
எனவே வயல் ஆய்வு மேற்கொண்டு நன்மை செய்யும் பூச்சிகளை விட தீமை செய்யும் பூச்சிகள் இருந்தால் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். இது பொருளாதார நுழைவு நிலையை தாண்டுவதாக இருந்தால் குறுவை பயிருக்கு கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கான அளவில் தெளிக்க வேண்டும்
1. அசாடிராக்டின் 0.03% (இ.சி) - 400 மில்லி
2. கார்போ சல்பான் 25% (இ.சி) – 300 மில்லி
3. பிப்ரோபெசின் 25% (இ.சி) – 300 மில்லி
4. குளோரிபைரிபாஸ் 20% (இ.சி) – 200 மில்லி.
தேவை இல்லாமல் மருந்து அடிப்பது மூலம் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுமே ஒழிய கட்டுப்படுத்துவது இயலாமல் போகும். எனவே கவனமுடன் பூச்சி மருந்துகளை கையாண்டால் உற்பத்தியை உயர்த்த முடியும். நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் பாதுகாக்கும் நிலையில் சாகுபடியும் அதிகரிக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை, எனவே தேவையான நேரத்தில் மட்டுமே பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.