கை கொடுக்கும் கோனோவீடர்... களைகளை வயலிலேயே அழுத்தி சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள்
இயந்திர சாகுபடி மேற்கொண்ட வயல்களில் கோனோவீடர் கருவியை பயன்படுத்தி விவசாயத் தொழிலாளர்கள் களை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் கோனோவீடர் கருவியை கொண்டு களைகளை வயலிலேயே எளிமையாக மடக்கி அகற்றும் பணிகளில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் பற்றாக்குறையை நவீன கருவிகள் பூர்த்தி செய்து வருகிறது. நடவுப்பணிகளையும் தற்போது ஏராளமான விவசாயிகள் இயந்திரங்களை கொண்டு மேற்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். இயற்கை வாழ வைத்தாலும், வாட்டினாலும் தங்களின் சாகுபடி பணிகளை கைவிடாதவர்கள்தான் விவசாயிகள். காவிரி டெல்டா மாவட்டத்தில் முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடந்து வருகிறது. சில பகுதிகளில் கோடை சாகுபடியாகவும் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் சாகுபடி வயல்களில் களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இயந்திர சாகுபடி மேற்கொண்ட வயல்களில் கோனோவீடர் கருவியை பயன்படுத்தி விவசாயத் தொழிலாளர்கள் களை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாடு அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இயந்திர வரிசை நெல் நடவு சாகுபடியில், களைகளைக் கட்டுப்படுத்துவதில் கோனோவீடர் மிகவும் உதவிகரமாக உள்ளது. எப்போதும் பயிருடன் போட்டிப் போட்டுக்கொண்டு, களையும் வளரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் களை அதிகரித்து காணப்படுகிறது. இத்தகையக் களைகள் நெல் சாகுபடியில் பயிருக்கு இடையூறாக இருப்பதுடன், அவற்றுக்கு அளிக்கப்படும் அனைத்துச் சத்துக்களையும் எடுத்துக் கொள்கின்றன.
இதனால் பயிர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் குறைந்து அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த களைகளைக் கட்டுப்படுத்த அதிகளவில் வேலையாட்கள் தேவைப்படுகின்றனர். தற்போது உள்ள விவசாய சூழலில் வேலையாட்கள் பற்றாக்குறையால் தேவையான ஆட்களும் கிடைப்பதில்லை. இதற்கு மாற்றாக நெல் வயலில் கோனோவீடர்களைக் கருவியை வயலில் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்தக் கருவியை திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர வரிசை நடவு சாகுபடியில் பயன்படுத்த முடியும். நெல் நடவு செய்ததில் இருந்து 10,20,30,40ம் நாட்களில் களைக் கருவியை இரு வரிசைகளுக்கு நடுவே குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும். பயிர் வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் முன்னும் பின்னுமாக இக்கருவியை இழுத்து இயக்குவதன் மூலம் களைகள் மண்ணில் அழுத்தி விடப்படுகின்றன. இவை மக்கி அழிவதன் வாயிலாக மண்ணுக்கு இயற்கை உரமாகவும் மாறிவிடுகிறது.
களைச் செடிகளால் எடுத்து கொள்ளப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மண்ணிற்கே திரும்புகின்றன. கோனோவீடர் மூலம் இடையில் உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும், செயல்பாடும் படிப்படியாக அதிகரிக்கிறது. இந்த கோனோவீடர் கருவிகளை கொண்டு தற்போது விவசாயத் தொழிலாளர்கள் வயல்களில் களைகளை அழித்து வருகின்றனர். குறைந்த நேரத்தில் குறைவான ஆட்களே தேவைப்படுகின்றனர். இதனால் விவசாயத் தொழிலாளர்கள் தட்டுப்பாடான நிலையில் தற்போது இயந்திர நடவு நடந்த பகுதிகளில் கோனோவீடர் கருவி விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செலவும், நேரமும் குறைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















