கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லாதது சரியானதல்ல: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக ஒரு குறுகிய காலக்கட்டத்துக்குள் மூட வேண்டும். கள்ளச்சாராயமே இல்லை என்று 100 சதவீதம் உறுதியாக இருக்க வேண்டும்.
தஞ்சாவூர்: இத்தனை உயிர்கள் பலியான நிலையிலும் முதல்வர் இன்னும் கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆறுதல் கூறி பதற்றத்தை குறைக்கவில்லை என்பது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மீனவர்கள் கைது சம்பவத்திற்கு கண்டனம்
தஞ்சையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பது. மீண்டும் மீண்டும் நம்முடைய மீனவர்கள் சமுதாயத்துக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற நிலை இனி தொடரக்கூடாது. இலங்கை அரசுடைய தவறான போக்கு கண்டிக்கத்தக்கது. அரசு உடனடியாக அழுத்தமான முறையிலேயே பேசி இதுபோன்ற சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு நடவடிக்கை தேவை
சில வருடங்களாக பல்வேறு மாநிலங்களுக்கு சவால் விடும் வகையில் தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதி மாணவர்கள் தங்களுடைய அறிவு கூர்மையால் நீட் தேர்வில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நீட் தேர்வில் சில தவறுகள் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் வெளிப்படை தன்மையோடு அதை ஏற்றுக்கொண்டு இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி துறையில் அரசியலை புகுத்தி மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்ப நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. குறிப்பாக பாராளுமன்றத்திலும் நீட் தேர்வு கூடாது என்று முடக்கக்கூடிய ஒரு நாடகத்தை ஆட இருக்கிறார்கள். இது வருங்கால மாணவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய நல்லதல்ல.
வேதனையை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி சம்பவம்
கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. நடந்து முடிந்த இத்தனை உயிர்கள் பலியான நிலையிலும் முதல்வர் இன்னும் கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆறுதல் கூறி பதற்றத்தை குறைக்கவில்லை என்பது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. இனி மேலாவது கள்ளச்சாராயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
சிபிஐ விசாரணைதான் தேவை
தமிழக அரசுனுடைய எந்தவிதமான விசாரணையும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. சிபிஐ. விசாரணை தான் இதற்கு முடிவு என்று முழுமையாக நம்புகிறார்கள். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக ஒரு குறுகிய காலக்கட்டத்துக்குள் மூட வேண்டும். கள்ளச்சாராயமே இல்லை என்று 100 சதவீதம் உறுதியாக இருக்க வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள் கடைகளை திறக்க வேண்டும் என்று கூறியது போன்ற ஆலோசனைகளை கேட்கலாம். நிச்சயமாக அரசு பரிசீலனையும் செய்ய வேண்டும் என்பதிலும் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.