தொடர் மழையால் விநாயகர் சதுர்த்தி வியாபாரம் முடங்கியது - தஞ்சை வியாபாரிகள் கவலை
தொடர் மழையால் விநாயகர் சதுர்த்தியன்று பொரி, கடலை, பூக்கள் வியாபாரம் வெகுவாக முடங்கியது. இதனால் வியாபாரிகள் வேதனையடைந்தனர்.
தொடர் மழையால் விநாயகர் சதுர்த்தியன்று பொரி, கடலை, பூக்கள் வியாபாரம் வெகுவாக முடங்கியது. இதனால் வியாபாரிகள் வேதனையடைந்தனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 600க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சையில் சிறிய அளவில் இருந்து சற்றே பெரிய அளவிலான விநாயகர் களிமண் சிலைகள் ரூ.50ல் இருந்து ரூ.250 வரை விற்பனையானது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து நன்கு விற்பனையானது. ஆனால் நேற்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதேபோல் கும்பகோணம் மடத்துத்தெரு, பெரிய கடைவீதி ஆகியவற்றில் ஏராளமானோர் வீடுகளில் வைத்து பூஜைகள் செய்து வழிபட களிமண் விநாயகர் சிலை விற்பனை, மலர் மாலைகள், உதிரி பூக்கள், மாவிலை தோரணங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது.
இருப்பினும் நேற்று பெய்த தொடர் கனமழையால் திடீரென வியாபாரம் பாதிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நேற்று கும்பகோணம் மடத்துத்தெரு பகுதியில் சாலையின் இருபுறமும் ஏராளமானோர் விதவிதமான களிமண் விநாயகர் சிலைகளை உடனுக்குடன் தயார் செய்து ரூபாய் 50க்கு விற்பனை செய்தனர். ஏழு எண்ணிக்கை கொண்ட மாவிலை தோரணங்கள் ரூபாய் 20க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வந்தி பூ கிலோ ரூபாய் 400க்கும், கதம்பம் பூ முழம் ரூபாய் 30க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விநாயகர் சிலையை மேலும் அலங்கரிக்க விதவிதமான பலவண்ண குடைகள் சிறியது மற்றும் பெரியது என ரூபாய் 20 மற்றும் 50க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல், எருக்கம் பூ, தாமரைப் பூ, அரளி, ரோஜா உள்ளிட்டவை கொண்ட தனி பாக்கெட்டுகளும் விற்பனை நடைபெற்றது. விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, கடலை ஆகியவற்றையும் அனைவரும் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
இதுபோல் இரு எண்ணிக்கை கொண்டு வாழைக்கன்றுகள் ரூபாய் 20க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சற்று விலை அதிகரித்து விற்பனையானது. இருப்பினும் விழா காலங்களில், தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் நம் பாரம்பரியத்தையும், பழக்க வழக்கங்களையும், விட்டு விட முடியாது என்ற முறையில் விலை கூடுதலாக இருந்தபோதும், தவிர்க்க முடியாமல் பொதுமக்கள் இவற்றை வாங்கி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நேற்று கும்பகோணம் மடத்துத்தெரு, பெரிய கடை வீதி ஆகிய பகுதிகள் வழக்கத்தை விட கூடுதல் பரபரப்பாக இயங்கியது. இருப்பினும், நேற்று கும்பகோணம் மற்றும் சுற்றுயுள்ள பகுதிகளில் காலை முதல் மாலை வரை தொடர் கனமழை பெய்தது. இதனால் நேற்று காலை சூடு பிடித்த விநாயகர் சதுர்த்தி விழா விற்பனை திடீரென மந்தமானது. மேலும் தொடர் மழை பெய்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் வேதனையடைந்தனர். பாதிக்கு கீழ் விலை குறைந்தாலும் வாங்குவதற்கு பொதுமக்கள் வராத நிலையே இருந்தது. மாலையிலாவது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்த்த வியாபாரிகள் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வியாபாரமின்றி கவலையடைந்தனர்.