எரிபொருள் இல்லா இயந்திரம்... விவசாயிகளுக்கு கை கொடுக்கும் நவீன தொழில்நுட்பம்
வீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றால் வேளாண் தொழிலில் புதுமைகள் புகுத்தப்பட்டன. கை நடவு செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது இயந்திரம் வாயிலாக நடவு செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தோழகிரிப்பட்டியில் எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக செலவுகளும் குறைந்து, நேரமும் மிச்சமாகிறது என்று தெரிவித்தனர்.
விவசாயத்தில் இன்று நவீன இயந்திரங்கள் பயன்பாடு என்பது மிக அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. முன்பு ஏர் கலப்பையில் உழவு செய்து வந்த விவசாயிகள் அதற்கு பிறகு டிராக்டர் இயந்திரத்தில் இரும்பு கலப்பையை இணைத்து வயலை உழுதனர். அதிலிருந்து நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றால் வேளாண் தொழிலில் புதுமைகள் புகுத்தப்பட்டன. கை நடவு செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது இயந்திரம் வாயிலாக நடவு செய்து வருகின்றனர். இதனால் நேர விரயம், செலவுகள் அதிகளவில் மிச்சமாகிறது.

அந்தளவிற்கு விவசாய தொழிலில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. காரணம் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறைதான். விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கின்றன. ஒரு கதவு அடைப்பட்டால் மற்றொரு கதவு திறக்கும் என்பார்கள். அது போல் விவசாய தொழிலாளர்கள் கட்டிடப் பணி உட்பட பல்வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர் இதனால் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிட்டது.
நடவு பணியில் இருந்து களைப்பறித்தல், உரம் தெளித்தல் உட்பட அனைத்திற்கும் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தான் நவீன கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக மாறி உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் தோழகிரிப்பட்டி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணியை நடந்து வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது தட்டுப்பாடான நிலையில் தான் இருந்து வருகிறது.
இப்பகுதியில் கடலை, உளுந்து போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பணிகளுக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது எரிபொருள் இன்றி எளிமையாக மனித சக்தியை பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி செய்யும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதை பயன்படுத்தி விவசாயியே தனது நிலத்தில் நிலக்கடலையை ஊன்றி சாகுபடியை தொடக்கி விடலாம். விரைவாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் கடலையை விதைக்க முடியும். கடலை மட்டுமின்றி, உளுந்து,பயறு போன்றவற்றையும் இந்த இயந்திரத்தை கொண்டு நடவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த இயந்திரத்தில் விதைக்கடலைகளை நிரப்பி கையால் தள்ளிக் கொண்டு சென்றால் வரிசையாக நடவு செய்து விட முடியும். மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் இதன் மூலம் தானியங்களை நடவு செய்ய இயலும். இதனால் செலவுகள் குறைகிறது. ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது நாமே இதை பயன்படுத்தி தானியங்களை விதைக்க முடியும். தற்போது நவீனமான கருவிகள் கிடைப்பது விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை அனைத்து பகுதியிலும் நிலவி வருகிறது. இந்த சூழலில் இது போன்ற எளிமையான கருவிகள் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து தருகின்றன என்று தெரிவித்தனர்.



















