(Source: ECI/ABP News/ABP Majha)
பூம்புகாரில் மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
ஊரை விட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3 வது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலணியை சேர்ந்த அல்லிமுத்து, தினேஷ், விக்னேஷ் உள்ளிட்ட 7 குடும்பத்தை சேர்ந்த 27 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இதனால் பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் இந்த 7 குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இது தொடர்பாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 3 -ம் தேதி ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லிமுத்து, தினேஷ் உள்ளிட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் வக்கீல் சரவணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மீன்களை எடுத்துவந்தால் அதனை வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று தடைவிதித்தும் ஊர் கட்டுப்பாட்டை மீறி தங்களுக்கு யாராவது உதவிசெய்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து வருகின்றனர்.
இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களை இந்து கோயிலுக்கு வரவேண்டும், திருநீர் பூசவேண்டும், வரிகொடுக்க வேண்டுமென்று மிரட்டுகின்றனர். வருவாய்த்துறையினர் அழைத்து பேசினால் ஊரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறிவிடுகின்றனர். உண்மையை மறைத்து 7 குடும்பத்தினரையும் ஒதுக்கிவைத்து துன்புருத்தி வருவதாக மனு அளித்தனர். அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீனவர்கள் மற்றும் அவர்களுக்க ஆதரவாக வந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனையடுத்து பூம்புகார் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கிராம பஞ்சாயத்தார்கள் தங்களை ஊருக்குள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி கடந்தவாரம் 10 -ம் தேதியும் மனு அளித்தனர். இந்நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுஅளித்தனர். இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகானப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியநிலையில், மீனவர்கள் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுட்டேரிக்கும் வெய்யிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீன் இருதரப்பையம் அழைத்து பேச்சுவாரத்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.