அமைச்சர் பங்கேற்ற விழாவில் போதையில் அலப்பறை செய்த கள மேலாளர் சஸ்பெண்ட்
முதலமைச்சர் - தாயுமானவன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் மூத்த குடிமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் கோவி.செழியன் மேடையில் இருந்த போது மதுபோதையில் ரவுசு செய்த கள மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 10 ஆயிரத்து 839 நபர்கள் பயன் பெறும் வகையில் ரூ. 120 கோடிக்கான கடன் தொகைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். இந்த விழாவில்தான் அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது.
72 ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா தேநற்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு 10,839 நபர்களுக்கு 120 கோடி ரூபாய்க்கான கடன்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழு கடன், நாட்டுப்புற கலைஞர் கடன், சிறு வணிக கடன், பணிபுரியும் மகளிர் கடன், சிறுகுறு தொழில் கடன், பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்று திறனாளிகள் கடன், மத்திய கால விவசாய கடன், பண்ணை சாரா கடன், நகைக் கடன், வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன், தாட்கோ கடன், என 23 வகையான கடன்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவி.செழியன், முதலமைச்சர் - தாயுமானவன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் மூத்த குடிமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தும் பொழுது 70 வயது கடந்த முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாக சென்று நியாய விலை கடைகளில் வழங்கும் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் தற்போது 65 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் நாடித்துடிப்பு அறிந்து அவர்களுக்கு தேவையான திட்டங்களை தமிழக முதல்வர் செய்து வருகிறார். இந்த திட்டம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதற்கு ஒப்பாகும். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்த ஆட்சி தொடர நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று தெரிவித்தார்.
அப்போது, விழா மேடையில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் பேசிக்கொண்ட இருந்த போது, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில், கள மேலாளராக, பணியாற்றும் பட்டீஸ்வரத்தை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர், மது போதையில் நின்று, கைத்தட்டிக்கொண்டு, சத்தமாக சிரித்து கூச்சலிட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
இதையடுத்து, மேடையில் இருந்த கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள், செல்வராஜை கீழே இறங்க கூறியுள்ளனர். ஆனால், செல்வராஜ் எதையும் கண்டுக்கொள்ளாமல் மேடையில் உலா வந்தார். இதனைக் கண்ட மேடையில் இருந்த கூட்டுறவு ஊழியர்கள், செல்வராஜை மேடையில் இருந்து அப்புறப்படுத்தி, போலீசார் உதவியுடன் அங்கிருந்த அறைக்குள் அடைத்தனர்.
இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான பெரியசாமி போதை அலுவலரான செல்வராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அமைச்சர் விழாவில் இப்படி நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.





















