ஓபிஎஸ் அப்போதே அம்மாவிற்கு எதிராகத்தான் இருந்தார் - தஞ்சையில் சீறிய இபிஎஸ்
ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்ற போது ஜானகி அணியில் ஏஜெண்டாக இருந்தவர்தான் ஓ.பி.எஸ்., அப்போதே அம்மாவிற்கு எதிராகத்தான் அவர் இருந்தார்.
தஞ்சாவூர்: அம்மாவிற்கும், அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் விசுவாசமாக இருந்ததே இல்லை. பலாப்பழத்தை வைத்து பூஜை செய்து மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைத்தவரை அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள் என்று தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தஞ்சை, நாகை மாவட்டத்தில் நடந்த கட்சி பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். பின்னர் அவர் சென்னைக்கு திரும்பும் வழியில் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
மேட்டூர் அணை திறக்காததால் சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை முழுமையாக தண்ணீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் பயிர்கள் கருகி விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டாக விவசாய தொழிலாளர்களும் பாதிப்பை சந்தித்தனர். காப்பீட்டு திட்டத்தில் குறுவை விவசாயிகளை சேர்த்து இருந்தால் விவசாயிகளுக்கு ரூ.84 ஆயிரம் கிடைத்திருக்கும். கடந்த 3 ஆண்டுகளாகவே டெல்டா மாவடத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை காப்பீட்டு திட்டத்தில் இடம்பெற செய்ய வேண்டும்
மத்திய அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை வழங்காமல் மாநில அரசு ரூ.13,500 என மிக குறைந்த இழப்பீட்டுத் தொகை தான் வழங்கி உள்ளது. அதிமுக அரசு இருந்தபோது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினோம். அதிமுக ஆட்சியில்தான் இரண்டு முறை விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசுதான் இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பயிர்கள் பாதிக்கப்படும் போது காப்பீட்டு திட்டத்தாலே நாட்டிலேயே அதிக இழப்பீடு தொகை வழங்கியது.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடையில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் கால்வாய்களை தூர்வார வேண்டும். தற்போது திமுக அரசு குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.78.67 கோடி அறிவித்துள்ளது இதில் பெரும் தொகை 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளது. இதனை கழித்து பார்த்தால் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.54.17 கோடி தான் விவசாயிகளுக்கு கிடைக்கும். குறுவைக்கும் தண்ணீர் இல்லை. சம்பாவுக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. எனவே இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கினோம். தற்போது 8 மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பிடித்து 3 பேர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிட்டத்தட்ட 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து கள்ளச்சாராய சாவு நடைபெற்று கொண்டுள்ளது.
மத்திய ஜல் சக்தி துறை இணைய அமைச்சர் சோமண்ணா ஒரு கருத்தை கூறியிருக்கிறார் மேகதாதுவில் அணை கட்டப்படும் என பத்திரிகை செய்தி வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை மத்திய இணை அமைச்சராக அறிவித்திருப்பது மிகப்பெரிய துரோகம். மத்திய அரசு நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என கூறியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் கூறியது கண்டிக்கத்தக்கது,
வேண்டுமென்றே திட்டமிட்டு தனியார் இடம் இருந்து போக்குவரத்து ஊழியரை நியமனம் செய்வது கண்டிக்கத்தக்கது. சசிகலா ரீ என்ட்ரி என்பது என்ன, வேலையில் இருந்து நீங்கி விட்டு பின்னர் மீண்டும் வேலைக்கு போவதா இத்தனை ஆண்டுகளாக கட்சியை காப்பாற்றியது யார் தொண்டர்கள்தான்.
நீட் தேர்விற்காக இங்கு போராட்டம் நடத்தக்கூடாது. பாராளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த 40 எம்பி களும் அழுத்தம் கொடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்த வேண்டும். அங்கு போராட்டம் நடத்த வேண்டும். இங்கு போராட்டம் நடத்தி என்ன பயன்? இந்தியா கூட்டணியில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பாடுபட வேண்டும். அதுதான் இவர்கள் மக்களுக்கு செய்யும் விசுவாசமாக இருக்கும்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக களத்தில் இருந்து விலகி இருக்கிறது. விக்கிரவாண்டி இடை தேர்தலில் போட்டியிடாத காரணம் திமுகவினர் வாக்காளர்களை பட்டித் தொட்டில் அடைப்பது போல் அடைத்து வைத்து மாலைதான் வெளியே விடுகிறார்கள். நாங்கள் சென்று யாரிடம் வாக்கு கேட்பது. அதிமுகவில் ஜாதிக்கு வேலையே இல்லை. ஜெயலலிதா யாருக்கு பதவி கொடுத்தாரோ அவர்களுக்கு தான் இப்பொழுதும் பதவி. அதிமுகவை பொருத்தவரை எம் ஜி ஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து தற்போது வரை ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்கள்.
திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர். அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமல் ஒரு சதவீதம் வாக்கு மட்டுமே குறைந்துள்ளது. திமுகவிற்கு 6.5 வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுக அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். ஓபிஎஸ் எப்போதுமே அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்தது கிடையாது. எதிராகத்தான் இருந்துள்ளார். ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்ற போது ஜானகி அணியில் ஏஜெண்டாக இருந்தவர்தான் ஓ.பி.எஸ்., அப்போதே அம்மாவிற்கு எதிராகத்தான் அவர் இருந்தார். எப்போது அவர் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்துள்ளார். பலாப்பழத்தை வைத்து பூஜை செய்து எப்படியாவது வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி விடலாம் என கனவு கண்டார். ஆனால் தமிழக மக்கள் அவருக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்துள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். அவர்களைப் பிணைக் கொடுத்தது திமுக அரசு. இதிலிருந்து கொடநாடு குற்றவாளிகளைக் காப்பாற்றுவது யார் என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.