அதிமுகவை உடைத்ததும், இணைக்க நினைப்பதும் பாஜகதான்... திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணத்தின் மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.

தஞ்சாவூர்: ஒன்றாக இருந்த அதிமுகவை உடைத்ததும், உடைந்த அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான். இந்த இணைப்பு முயற்சியில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று திராவிடர் கழக கட்சியை சேர்ந்த பிரமுகரின் இல்ல திறப்பு விழாவிற்கு வீரமணி வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணத்தின் மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் 18 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எட்டே நாளில் இந்த சாதனையை செய்துள்ளார். மேலும் பெரியாரின் கொள்கைகளையும் மேலை நாடுகளில் முதலீடு செய்துள்ளார். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. முதலீட்டை பெற்றும் வந்துள்ளார். முதலீட்டையும் செய்து வந்துள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம். இந்த ஆட்சி சமூக நீதி, சமத்துவம், சுய மரியாதைக்கான ஆட்சிக்கான பாடுபடுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி வந்துள்ளார்.
செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவை உடைத்ததும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான். இப்போது அவர்களை இணைக்க முயற்சிப்பதும் அவர்கள்தான். ஆளுநர் மூலம் அக்கட்சியை பிரித்ததும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்தான்.
அதிமுக இணைவது ,பிரிவது என்பது அந்த கட்சியின் உட்கட்சி பிரச்சனை. அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இணைவது என்றால் சுதந்திரமாக சிந்தித்து, பேசி சுதந்திரமாக இணைய வேண்டும். ஒட்டுமொத்தமான அடிமை சாசனம் தங்களுக்கு வந்தால் திமுக ஆட்சியை அப்புறப்படுத்துவோம் என்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் அதிமுகவை இணைக்கும் வகையில் பாஜக, ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகின்றன.
திமுக ,அண்ணா திமுக பிரிந்த பின் இரு கட்சிகளும் இணையும் முயற்சியில் ஈடுபட்ட போது அதை தடுத்தது அப்போதைய டெல்லி மேலிடம்தான். எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று டிடிவி தினகரன் கூறியிருப்பதற்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. தற்போது அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்றாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















