பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது - காமராஜ்
குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 என்று அறிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை வழங்காதது ஏன்? என காமராஜ் கேள்வி
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலை குற்றங்கள் போன்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டி கடந்த 9ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி மாலை நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் இருந்தது. இதன் காரணமாக அதிமுகவின் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், மேலும் மறு சாகுபடிக்காக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 12,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சரான காமராஜ் எம்எல்ஏ கூறியதாவது, மழை வெள்ளை பாதிப்பில் திருவாரூர் மாவட்டம் முதன்மை வகிக்கிறது. அதனால் நிதி ஒதுக்கீட்டிலும் திருவாரூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாவட்டத்தில் மழையால் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மூன்று முறை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையும் துயரமும் அடைந்துள்ளனர். விவசாயிகளின் வேதனையை போக்க திமுக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ 40 ஆயிரம் நிவாரணம் வலியுறுத்துகிறோம். குறைந்தபட்சம் ரூ 30 ஆயிரம் என்ற அளவிலாவது கொடுப்பதற்கு கூட திமுகவிற்கு மனம் வரவில்லை. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ 1000 என்று அறிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை வழங்காதது ஏன்? ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற திமுக அரசால் ரத்து செய்ய முடிந்ததா? மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. இதுபோல் மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களுடைய வரியை குறைத்து விலை குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக அரசு வாய்மூடி மௌனம் காக்கிறது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியின் காரணமாக, அதை தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். பொய் வழக்குப்போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என்ற அவர்களது பகல் கனவு ஒரு நாளும் பலிக்காது. இது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம். கட்டுப்பாடு மிக்க தலைவர்களை கொண்டுள்ள இந்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் வேதனைகள் தீர்க்கப்படும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ பேசினார்.