தஞ்சையில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு- நாற்காலிகள் உடைப்பு...!
திமுக கட்சியினர், வணிகர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையப் பகுதிகள் ரூ.28.73 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக 93 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு பொது ஏலம் விட மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேற்று முன்தினம் பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. இதில் ஒரு கடை மட்டும் ஏலம் விடப்பட்ட நிலையில், ஏற்கெனவே கடைகளை வைத்து நடத்திய வியாபாரிகள் தங்களுக்கு பொது ஏலத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் கூறி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை வரை நடைபெற்றதை அடுத்து, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள 54 கடைகளுக்கு மட்டும் இன்றைய தினம் ஏலம் நடைபெறும் என கூறப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் முன்பாக டிஎஸ்பிக்கள் ரவீந்திரன், ராஜ்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஏலம் எடுக்க விண்ணப்பித்தவர்கள் மட்டுமே, அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பொது ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கடைகளுக்கும் மாத வாடகையாக 50 ஆயிரத்துக்கு மேல் கேட்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏலத்தொகை, வைப்புத் தொகையை 24 மணி நேரத்துக்குள் செலுத்த உறுதிமொழியும் பெறப்பட்டது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவில் பொதுமக்களுக்கும், ஏலம் எடுக்க வந்தவர்களுக்கும் ஒளிபரப்பப்பட்டது. இதற்கிடையில் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கடைகளை நடத்தி வந்தவர்கள், உள்ளாட்சி கடை உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமையில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு முறையற்ற ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என ஏலம் நடைபெறும் வளாகத்தில் கூச்சலிட்டனர்.
ஏலம் நடைபெறும் இடத்திற்கு ஒடியதால், போலீசார் அவர்களை இடித்து தள்ளி அப்புறப்படுத்தினர். பின்னர் உள்ளாட்சி கடை உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாண்டியன், வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திமுக கட்சியினர், வணிகர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.
தொடர்ந்து ஆணையர் சரவணகுமார் தொடர்ந்து ஏலத்தை நடத்தி கொண்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் மற்றும் திமுகவினர், மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏலம் விடப்படுவது முறைகேடாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கடைக்கும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏலம் போகிறது, மேலும் ரூ.10 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உயர்நீதிமன்றம் உத்தரவையும் மீறி இந்த ஏலத்தை அவசர அவசரமாக நடத்தி தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி ஆணையரின் செயல்பாடு ஏலத்தை ரத்து செய்யாவிடில் தஞ்சாவூர் மாநகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டமும் சாகும் வரை உண்ணாவிரதமும் நடத்தப்படும் என்றார்.