தஞ்சையில் குவிந்த தீபாவளி குப்பைகள்: 400 டன் அளவில் அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்
தஞ்சாவூரில் தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு வெடித்ததால் சேர்ந்துள்ள சுமார் 400 டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகை நேற்று தஞ்சாவூரில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு வெடித்ததால் சேர்ந்துள்ள சுமார் 400 டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று மதியத்திற்கு முழுமையாக குப்பைகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளி கொண்டாடப்படும் மாதங்கள்
இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது.
இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்கு உட்பட்ட நாட்களில் தீபாவளி பண்டிகை அமைகிறது.
சமணர்கள், சீக்கியர்களும் கொண்டாடும் தீபாவளி
இந்தியா மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் இந்தப் பண்டிகை தினத்தன்று அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
தஞ்சையில் குவிந்த குப்பைகள்
அந்த வகையில் இந்தாண்டு நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சாவூர் மாநகரில் கடந்த புதன் கிழமை அன்று தரைக்கடைகள் மற்றும் பெரிய கடைகளில் ஆடைகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதனால் புதன் நள்ளிரவு அன்று பாலிதீன் கவர்கள் குப்பைகள் அதிகளவில் தஞ்சை மாநகரில் குவிந்தது. அதேபோல் நேற்று தீபாவளியை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதில் ஏற்பட்ட பேப்பர் குப்பைகள் என சுமார் தஞ்சை மாநகராட்சியில் மட்டும் சுமார் 400 டன் அளவிற்கு குப்பைகள் குவிந்தன. இந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் தீவிரமாக ஈடுபட்டனர்.
வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிப்பு
தஞ்சை மாநகராட்சியை பொருத்தவரை எப்பொழுதும் வழக்கமாக 51 வார்டுகளிலும் நாளொன்றிற்கு சுமார் 110 முதல் 120 டன் குப்பைகள் சேர்வது வழக்கம். 51 வார்டுகளிலும் சேகரிக்கக் கூடிய குப்பை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் நகர் முழுவதும் குவிந்தன. பட்டாசு வெடித்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 280 டன் அளவிற்கு குப்பைகள் சேர்ந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் தஞ்சை மாநகர் முழுவதும் குப்பைகளை தூய்மை செய்ய 500 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
40 கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன
மேலும் 40 கனரக வாகனங்கள் மூலம் குப்பைகளை அள்ளி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு தூய்மை பணியில் துப்புரவு பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். மாநகர் முழுவதும் உள்ள குப்பைகள் முழுமையாக இன்று மாலைக்குள் அப்புறப்படுத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் வெடி குப்பைகள் அதிகளவில் இருந்தன. மேலும் ஆடைகள் வைத்திருந்த பிளாஸ்டிக் பேப்பர்கள் என்று ஏராளமாக குவிந்திருந்தன. இவற்றை மிகவும் சிரமப்பபட்டு மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.