திமுக என்ற ஆலமரத்தை பிளேடால் வெட்டப் போகிறார்களாம்... துணை முதல்வர் உதயநிதி கொடுத்த பதிலடி
திமுக யாராலும் தொட்டுப் பார்க்க அசைக்க முடியாத இயக்கம். எப்பேர்பட்ட புயலையும் தாங்க கூடிய இயக்கம். சிலர் பிளேடுகளை எடுத்து வருகிறார்கள் நான் திமுக என்று ஆலமரத்தை வெட்டப் போகிறேன் என்று.
தஞ்சாவூர்: திமுக யாராலும் தொட்டுப் பார்க்க அசைக்க முடியாத இயக்கம். எப்பேர்பட்ட புயலையும் தாங்க கூடிய இயக்கம். சிலர் பிளேடுகளை எடுத்து வருகிறார்கள் நான் திமுக என்று ஆலமரத்தை வெட்டப் போகிறேன் என்று. இது சாத்தியமா என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூரில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவையாறு பகுதியில் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி துணை முதலமைச்சராக எனக்கு பொறுப்பு வழங்கினார். கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிர்வாகிகள், தொண்டர்களின் அன்பை பெற்றுக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தஞ்சை மாவட்டத்திற்கு வந்தேன். தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் மழை பெய்யும் என்று சொல்லுவார்கள். அது உண்மைதான். உங்களது அன்பு மழையிலும் வாழ்த்து மழையிலும் நான் நனைந்து கொண்டு இருக்கிறேன்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் முதல்வர் ஸ்டாலின், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் சிலையை திறக்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரே நேரில் சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் தொகுதியில் கலைஞர் சிலையை திறந்து வைத்துவிட்டு தற்போது திருவையாறு பகுதியில் திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்று இருக்கிறேன். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அது மட்டும் இல்லாமல் கலைஞர் நெஞ்சில் நிறைந்து இருக்க கூடிய பேரறிஞர் அண்ணா சிலை திறந்து வைத்துள்ளோம். நான் திறந்து வைக்கின்ற முதல் பேரறிஞர் அண்ணா சிலை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது என்பது கூடுதல் சிறப்பாகும். சிலையை திறந்து வைப்பதால் என்ன அர்த்தம் என்றால் பேரறிஞர் அண்ணா கலைஞர் அவர்களின் லட்சியங்களை அவர்களது லட்சியங்களை எழுத்துக்களை கோட்பாடுகளை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பது அர்த்தம். பேரறிஞர் அண்ணா வழிகாட்டுதலில் கலைஞர் ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் உழைத்தார்.
அந்த வழியில் இன்று சிறப்பான முறையில் மக்களின் ஆதரவோடு திராவிட மாடல் அரசை வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் 234 தொகுதியில் 200 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெற்று ஆக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு நீங்கள் அத்தனை பேரும் கழகத்தின் ஆட்சி சாதனைகளை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். அதிமுக பல அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். யார் யாரோ வந்து புதுசாக விமர்சனம் செய்கிறார்கள். திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அது பற்றியெல்லாம் நாம் கவலை பட தேவையில்லை. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் மக்களிடம் போய் கேளுங்கள் மக்கள் சொல்லுவார்கள் திராவிட மாடல் அரசு என்றால் என்னவென்று.
திமுக யாராலும் தொட்டுப் பார்க்க அசைக்க முடியாத இயக்கம். எப்பேர்பட்ட புயலையும் தாங்க கூடிய இயக்கம். சிலர் பிளேடுகளை எடுத்து வருகிறார்கள் நான் திமுக என்று ஆலமரத்தை வெட்டப் போகிறேன் என்று. இது சாத்தியமா. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலினை மீண்டும் அந்த முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பது தான் எங்களுடைய ஒரே இலட்சியம். அந்த உறுதியை பேரறிஞர் அண்ணா கலைஞர் சிலை முன்பு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பணியில் அமர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.