தஞ்சையில் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குறுவை நெல்லை உடன் கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தேங்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ளது. இதில் ஆலக்குடியில் உள்ள இரண்டு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது. ஈரப்பதம் என்று சொல்லி இழுத்தடிக்கூடாது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 22 சதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயிகளை பாதுகாக்க குறுவை சாகுபடி நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் செய்யப்பட்ட உடனேயே காலதாமதம் இல்லாமல் பணத்தை உடன் பட்டுவாடா செய்ய வேண்டும். தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய வைத்த நெல்லும் மழையில் நனைந்து விடுகிறது. இந்நிலை தொடர்ந்தால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே கேட் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் முன்பாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் ஞானமாணிக்கம், துணைச் செயலாளர் கோவிந்தராஜ், சிபிஎம்., ஒன்றிய செயலாளர் அபிமன்யூ, ஆலக்குடி விவசாயிகள் சங்க தலைவர் அசோகன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சக்திவேல் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குறுவை நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் விவசாயிகள் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று தனியார் நெல் வியாபாரிகளிடம் தங்கள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சித்திரக்குடி, வல்லம், கள்ளப்பெரம்பூர் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தது. பின்னர் மழை நின்ற பின்னர் வயல்களில் இருந்த தண்ணீரை வடிய செய்யும் பணிகளில் விவசாயிகள் இறங்கினர். தொடர்ந்து அறுவடை செய்யும் பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதம் மட்டுமே ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஈரப்பதம் அதிகம் இருக்கிறது என்பதால் நெல்லை விவசாயிகள் சாலையிலேயே காயவைக்கின்றனர்.
இரவு நேரத்தில் இதற்கு காவலுக்கு ஆட்கள் இருக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் கொள்முதல் நிலையங்களில் தற்போது நாள் ஒன்றுக்கு 500 மூட்டைகள் மட்டுமே பிடிக்கப்படுகிறது. காரணம் நெல்லில் கருக்காய் இல்லாமல் கொண்டு வர வேண்டும் என்பதால் இயந்திரத்தை வைத்து நெல்லை சலிக்கும் பணிகள் நடக்கிறது. இது முடிந்து ஈரப்பதத்தை பார்த்தே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
தஞ்சை அருகே வல்லம், ஆலக்குடி, கரம்பை, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் அறுவடை நடந்து வருகிறது. மேலும் இப்பகுதிகளில் திடீர் திடீரென்று இரவு நேரத்தில் மழை பெய்வதால் காய வைத்த நெல்லும் நனையும் நிலை ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.