மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலையில் வீடுகள் இடிப்பு - காரணம் என்ன?
கும்பகோணம் முதல் சீர்காழி வரை SH-64 நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50 -க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வரை SH-64 நெடுஞ்சாலை சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடுத்துதல் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி மெயின் ரோடு உளுத்துக்குப்பை கிராமத்தில் இருந்து சீர்காழி சட்டநாதபுரம் வரை இரண்டாம் கட்டமாக பணிகள் இன்று தொடங்கப்பட்டது.
சாலை அகலப்படுத்தல் பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, இடத்திற்கான இழப்பீட்டுத் தொகையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றப்படாததால் தற்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நர்மதா தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றும் பணியை தொடங்கியுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பையில் தொடங்கிய பணி 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி சட்டநாதபுரம் வரை சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வணிக வளங்கள் வீடுகளை இடிக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் இடிக்க கால அவகாசம் கேட்டும் அதை மறுத்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை அகற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மயிலாடுதுறையில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
ஆண்டு தோறும் ஊழல் தடுப்பு வாரமாக அக்டோபர் 31 -ஆம் தேதியிலிருந்து நவம்பர் 5 -ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனிடையே வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, லஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவது பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 200 -க்கும் மேற்பட்டோர் பேரணியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்த பேரணியின் இறுதியில் காவல்துறையினர் மாணவர்களிடம் லஞ்சம் வாங்குவது மற்றும் கொடுப்பது இரண்டுமே தவறு என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரையாற்றினர்.