மயிலாடுதுறை: புதிய வகை பூச்சி தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிப்பு..!
சீர்காழி பகுதியில் புதிய வகை பூச்சி தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, தர்பூசணி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பிரதான பயிராக நெல்லும், பருத்தியும் இருந்து வருகின்றது. பணப்பயிரான பருத்தி அறுவடை கண்டு நல்ல பலனை விவசாயிகளுக்கு கொடுக்கும், அதேவேளையில் சில நேரங்களில் தண்ணீரின்றி செடிகள் காய்வதும், பூச்சி தாக்குதலுக்கு ஆளாவதும் என விவசாயிகளுக்கு நஷ்டத்தையும் விளைவிக்கும்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இன்றி உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்காதது, உரிய நேரத்தில் மழை பெய்யாதது, அதிக மழைப்பொழிவு, புயல், மழை போன்ற பேரிடர் என பல்வேறு காரணங்களால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நல்ல முறையில் நெல் விளைச்சல் கண்ட நிலையில் அறுவடை செய்யும் சமயத்தில் பருவம் தவறிப்பெய்த கனமழையின் காரணமாக நெல்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிரிட்ட தர்பூசணிகளை வாங்க வியாபாரிகள் இன்றி வயலில் காய்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்த மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகளுக்கு தற்போது அடுத்த பேரிடியாக பயிரிட்டுள்ள பருத்தி செடிகளில் புதிய வகை பூச்சி தாக்குதல் அவர்களை நிலை குலைய செய்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை மாதம் இறுதியில் தொடங்கும் பருத்தி சாகுபடி தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. பருத்தி செடியில் மூன்று முறை பருத்தி பஞ்சுகள் எடுக்கப்படும் இம்முறை முதல் ஈல்டு எடுப்பதற்கு முன்பே, வைத்தீஸ்வரன்கோவில், மருவத்தூர், கற்கோவில், புங்கனூர், காடாகுடி, வடக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்டுள்ள பருத்தி செடிகளில் தற்போது புதிய வகை பூச்சி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் பருத்தி செடியின் இலைகள் பக்கவாட்டில் பழுத்து காய்ந்து காணப்படுகின்றன. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பருத்தி விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதல் இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என யூகித்து அதற்கான மருந்துகளை வாங்கி தெளித்துள்ளனர். ஆனால், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து புதிய வகை பூச்சி தாக்குதலால் இதுபோன்ற பாதிப்புக்கு பருத்தி செடிகள் ஆளாகி உள்ளது என்பதை உணர்ந்த விவசாயிகள், வேளாண் துறையினர் பாதிப்புக்கு உள்ளான பருத்திச் செடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பருத்திச் செடிகளை பாதுகாப்பதற்கான மருந்தினை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.