பங்குச்சந்தையில் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை! ரூபாய் 26 லட்சத்தை பறிகொடுத்த முதுகலை பட்டதாரி!
பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என கூறி தஞ்சையை சேர்ந்த முதுகலை பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்: பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என கூறி தஞ்சையை சேர்ந்த முதுகலை பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகலை பட்டதாரி வாலிபர்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 42 வயது முதுகலை பட்டதாரி. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சித்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் முகநூல் பயன்படுத்தினார். அப்போது ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் பங்குச் சந்தையில் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
வாட்ஸ் அப் குரூப்பில் இணைப்பு
மேலும், அதில் சேர்வதற்கான லிங்கும் கீழே கொடுக்கப்பட்டிருந்தது. அந்த லிங்கை கிளிக் செய்தபோது அது நேரிடையாக மற்றொரு சமூக வலைதளமான வாட்ஸ்-குரூப்பிற்கு சென்றது. அந்த குரூப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அதிலிருந்த போலியான நபர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அந்த குரூப்பில் இருந்த நபர்கள் தனக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்ததன் மூலம் அதிக பணம் கிடைத்ததாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அவருக்கு சம்பந்தப்பட்ட மர்மநபர்கள் டிரேடிங் கணக்கு (பங்கை வாங்க விற்க உதவும் கணக்கு) மற்றும் டிமெட் கணக்கு (பங்குகளை டிஜிட்டல் முறையில் வைக்க உதவும் கணக்கு) போன்ற பங்குச்சந்தை கணக்குகளை தொடர நிபந்தனை விதித்தனர்.
ஆன்லைன் மூலம் பணம் அனுப்பினார்
இந்த கணக்குகளை தொடங்கிய அவர் கடந்த 4ம் தேதி முதல் பணத்தை பங்குச்சந்தையில் ஆன்லைன் மூலம் அனுப்ப தொடங்கினார். இதனை தொடர்ந்து ரூ.27 ஆயிரம் மற்றும் ரூ.32 ஆயிரம் என பல்வேறு தவணைகளாக ரூ.26 லட்சத்து 26 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். இதற்கான லாபத் தொகையாக அவருக்கு ரூ.36 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.
வாட்ஸ் அப் குரூப்பில் குறுந்தகவல்
இதனையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள நபர்களிடம் குறுந்தகவல் மூலம் தொடர்பு கொண்டார். அதில் பேசிய மர்மநபர்கள் பங்குச்சந்தையில் முழுவதுமாக பணத்தை முதலீடு செய்தால்தான் தங்களுக்கான லாபம் கிடைக்கும் என்றதோடு மேலும் பணம் செலுத்துமாறு கூறி வாட்ஸ்-குரூப்பில் இருந்து வெளியேறி விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், தங்களது வங்கி கணக்கு, செல்போன் எண், புகைப்படம், முகவரி, ஆதார் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்கும் எந்த ஆன்லைன் செயலிகளையும் பதிவிறக்கம் செய்யவேண்டாம். இதுபோன்ற மோசடிகள் மற்றும் ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற சைபர்கிரைம் போலீசாரின் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.