திருவாரூரில் தொடர் கனமழை - வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
’’திருவாரூர் மாவட்டத்தில் பகல் நேரங்களில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் தினசரி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது’’
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 10 தினங்களுக்கு மேலாக கன மழையும், மிதமான மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. பகல் நேரங்களில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் தினசரி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று நள்ளிரவு தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 7 சென்டி மீட்டர் மழையும், முத்துப்பேட்டை பகுதியில் 6 சென்டி மீட்டர் மழையும், திருத்துறைப்பூண்டி பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும், திருவாரூரில் 2.5 சென்டி மீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல திருவாரூர் மாவட்டம் குடவாசல், திருவாரூர், வலங்கைமான் போன்ற ஒன்றியங்களில் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 5000 ஏக்கர் குறுவை பயிர்கள் கனமழையால் சாய்ந்து மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16,163 கன அடியில் இருந்து 15,479 கன அடியாக குறைந்தது
இந்த நிலையில் திருவாரூர் அடுத்த பிலாவடிமூளை பகுதியைச் சேர்ந்தவர் கிளியம்மாள் (65). கொடிக்கால்பாளையம் பகுதியில் வசிக்கும் முகமது இக்பால் என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் முகம்மது இக்பாலின் வீட்டுக்கு வேலை செய்வதற்காக கிளியம்மாள் சென்றுள்ளார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்தபோது வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து கிளியம்மாள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் கிளியம்மாள் சிக்கிக்கொண்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த முகமது இக்பால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கிளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிய வந்தது. கிளியம்மாளின் உடலை மீட்ட திருவாரூர் நகர காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், முகம்மது இக்பாலின் வீட்டின் முன்பக்க நிழல் தரும் மேற்கூரை எந்தவித துணை கட்டுமானமும் இன்றி தனியாக இருந்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், மழைநீர் அந்த மேற்கூரையில் தேங்கி இருந்ததாலும் கட்டுமானம் பலம் இழந்து இடிந்து விழுந்துள்ளது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.