மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16,163 கன அடியில் இருந்து 15,479 கன அடியாக குறைந்தது
’’நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16,163 கன அடியாக குறைந்திருந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 15,479 கன அடியாக மேலும் குறைந்துள்ளது’’
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் தற்போது அணைக்கு வரும் நீர் வரத்து மீண்டும் சரிந்துள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 17,665 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16,163 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 15,479 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 81.47 கனஅடியாகவும், அணையின் நீர் இருப்பு 43.43 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீரின் அளவும் வினாடிக்கு 600 கன அடியில் இருந்து 750 கன அடியாக உயர்த்தப்பட்டு இருந்தது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 115.4 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 37.51 கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11,893 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6,386 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 60.46 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 16.73 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 2,728 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 4,816 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது .