கோவை கார் வெடிப்பு சம்பவம்: சீர்காழியில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை
கோவை கார் வெடிப்பில் தொடர்புடையை என்ற சந்தேகத்தின் பேரில் சீர்காழியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.
கோவை, சென்னை உள்பட தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்று அதிகாலை 4.20 மணி முதலே நடந்து வருகிறது. சென்னையில் மன்னடி, ஜமாலியா, புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினுடன் தொடர்புடையவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படுபவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் ஜமேஷா முபினின் தங்கை கணவர் வீடு, மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் ஒருவர் வீடு என பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23 -ம் தேதி, கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கு மாநில காவல்துறையினரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ்ஷ(27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், பிரச்சார வீடியோக்கள் உட்பட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கார் வெடிப்பில் இறந்த முபின், தனது கூட்டாளிகளுடன் இணைந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. சம்பந்தப்பட்ட 6 பேரையும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை ஆஜர்படுத்தினர். 6 பேரையும் வரும் 22 -ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் கோவை, சென்னை, மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சொக்கலிங்கம் நகரை சேர்ந்த அல்பாஜித் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். BBA பட்டதாரியான இவர் திருமலைவாசல் பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுனராக இருந்து வருகிறார். மேலும் இஸ்லாமிய எஜுகேஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த சூழலில் இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு வருகை புரிந்த என்ஐஏ ஆய்வாளர் சைலோஷ் குப்தா தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வீட்டை பூட்டி சுமார் 6 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டின் உள்ளே அவர் சகோதரி மற்றும் அம்மா ஆகியோர் இடமும் நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஏற்கனவே சென்னையில் இவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அதிகாரிகள் மீண்டும் அவர் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சோதனைகளில் இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள், சிடிகள், பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சோதனையை அதிகாரிகள் நிறைவு செய்து சென்றனர்.