பசுமைப்புரட்சி தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு: தஞ்சை விவசாயிகள் வரவேற்பு
பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமை பெற்ற மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. இதை தஞ்சை மாவட்ட விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்: பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமை பெற்ற மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. இதை தஞ்சை மாவட்ட விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பசுமைப்புரட்சி நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆகஸ்ட் 7, 1925 அன்று பிறந்தார். கடந்தாண்டு செப்டம்பர் 28, 2023 காலமானார். இந்திய மரபியலாளர் மற்றும் சர்வதேச நிர்வாகி, இந்தியாவின் முன்னணிப் பங்கிற்குப் புகழ்பெற்றவர். பசுமைப் புரட்சி என்ற திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளின் வயல்களில் அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் நெல் நாற்றுகள் நட முக்கிய பங்காற்றியவர்.
அறுவை சிகிச்சை நிபுணரின் மகனான சுவாமிநாதன், இந்தியாவிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் (Ph.D., 1952) மரபியல் நிபுணர் படிப்பு படித்தார் தொடர்ந்து பல ஆராய்ச்சி மற்றும் நிர்வாக பதவிகளை வகித்தார். அந்த பதவிகளில் பணிபுரியும் போது, அவர் அதிக மகசூல் தரும் கோதுமை சாகுபடியை அறிமுகப்படுத்த உதவினார். நவீன விவசாய முறைகளை அதிக அளவில் ஏற்றுக்கொள்ள உதவினார் . 1972 முதல் 1979 வரை அவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநராக இருந்தார், மேலும் அவர் 1979 முதல் 1980 வரை இந்திய வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் முதன்மை செயலாளராக இருந்தார்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (1982-88) இயக்குநராக பணியாற்றினார். மற்றும் இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவராக (1984-90) இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். புதிய ரக கோதுமைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, கோதுமை உற்பத்தியைப் பெருக்கி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டைப் பெற்றார். அரிசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தி, நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தார்.
1989-ல் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பத்ம விபூஷன் விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் வழங்கினார். இயந்திர மயமாக்கப்பட்ட பண்ணைக் கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைக்கொல்லி மருந்துகள், உரங்கள் என விவசாயத்தில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி, விவசாயத்தை நவீன தொழில் துறை அமைப்பாக மாற்றினார். வேளாண் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துவந்த நிலை மாறி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையை உருவாக்கினார்.
1988-ல் சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார்.இந்த நிறுவனம் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காகவும், வேளாண் ஆராய்ச்சிக்காகவும் தொடர்ந்து பல்வேறு வழிகளில் பாடுபட்டு வருகிறது. இதன் நிறுவனராகவும், தலைமை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு மற்றும் வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோ விருது, ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மகசேச விருது, எம்.எஸ்.பட்நாகர் விருது உள்ளிட்ட 41 தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். உலக அளவில் 38 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன.
இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் எம்.எஸ்.சுவாமிநாதன் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். மத்திய வேளாண் அமைச்சக செயலர், மத்திய திட்டக்குழு உறுப்பினர், தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவர், உணவுப் பாதுகாப்புக்கான உலக குழுவின் உயர்நிலை நிபுணர் குழுத் தலைவர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில், "இந்த விருது காலதாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவருக்கு தற்போது பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக எங்களது வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.