அரசு பேருந்தை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டிய அசத்திய பூம்புகார் திமுக எம்.எல்.ஏ நிவேதா முருகன்
’’அல் கரீம் அறக்கட்டளை சார்பில் அக்கிராம சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்களுக்கு அர்பணித்துள்ளனர்’’
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலை அடுத்த அரங்கக்குடி வடகரை கிராம சுற்று வட்டார பகுதி முழுவதும் ஏழை எளிய விவசாய குடும்பத்தினர் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஏற்படும் உடல்நல பாதிப்புகள், பிரசவ வலி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்து உயிருக்கு போராடும் சூழலில் அங்குள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவி பெற வேண்டும் என்றால், மயிலாடுதுறை நகரை நோக்கி வர வேண்டும்.
அவ்வாறு வரவேண்டுமென்றால் அதற்கு உரிய வாகன வசதிகள் இல்லாததால், 108 ஆம்புலன்சை தொடர்பு கொள்ளும் பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் ஆனது நகர் பகுதியில் இருந்து கிராமத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அழைத்து செல்ல வருவதற்கு முன் காலதாமதம் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும், நடந்தேறி வந்துள்ளது. இதனை தடுக்க அப்பகுதியை சேர்ந்த அல் கரீம் அறக்கட்டளை முடிவு செய்து. அக்கிராம சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்தது.
அன்று அரசு பேருந்து இன்று ஆம்புலன்ஸ்....ஓட்டி அசத்தும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்! pic.twitter.com/OuVi9rlav7
— JAGANNATHAN (@Jaganathan_JPM) January 26, 2022
அதனைத் தொடர்ந்து அல் கரீம் அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா, மயிலாடுதுறை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சம்சுதீன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா.முருகன் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கினார்.
முன்னதாக, கடந்த வாரம் திருவிடைக்கழி - மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த அரசுப் பேருந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அந்த பேருந்தை சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அவர் ஓட்டிச் சென்று மக்கள் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தது மட்டுமின்றி பல ஊடகங்களில் செய்திகளும் பதிவாகின. அந்த உற்சாகத்தில் இருந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தானே இயக்கி வடகரையிலுள்ள தெருக்களில் ஓட்டிய மகிழ்ந்தவாறு வலம் வந்தார். நிகழ்ச்சியில், ஜமாத்தார்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.