கலக்குது... அசத்துது... மாணவர்களின் கலைப்படைப்புகள்: எங்கு தெரியுங்களா?
இக்கண்காட்சியில் விஷூவல் கம்யூனிகேஷன் கடைசி ஆண்டு மாணவர் சக்திவேல் (27) செய்திருந்த அச்சு அசல் கும்பகோணம் வீட்டின் டைரோமா மினியேச்சர் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி சார்பில் ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது.
தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி சார்பில் இந்த கண்காட்சி நடக்கிறது. கல்லூரியின் வண்ணக் கலைத்துறை, காட்சி வழி தகவல் வடிவமைப்பு துறை, சிற்பக் கலைத்துறை ஆகிய துறைகளில் பயிலும் 220 மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் ஆயில் கலர், அக்ரிலிக் கலர், நீர் வண்ண ஓவியங்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், விழிப்புணர்வு போஸ்டர்கள், புகைப்படங்கள் மற்றும் கணினி ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதில் துணி கட்டி சாயமிடுதல் பயிற்சியை கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர் ராதா குழுவினர், காகிதக் பொம்மை பொம்மலாட்ட பயிற்சியை பேராசிரியர் அருள் அரசன் குழுவினர், களிமண் சிற்ப பயிற்சியை பேராசிரியர் லிவிங்ஸ்டன் குழுவினர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட நுணுக்கங்கள் குறித்த பயிற்சியை பேராசிரியர் அருண் ஆகியோர் வழங்குகின்றனர்.
கண்காட்சியை காண வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் உருவப்படங்களை வரைந்து மாணவர்கள் வழங்குகின்றனர். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப் பொருட்கள் அனைத்தும் விற்பனையும் செய்யப்படுகிறது. மேலும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் அருங்காட்சியக திறந்தவெளி கலையரங்கில் மாலை கிராமிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு நாளை 23ம் மாலை நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் பேசுகையில், மாணவர்களின் கலை படைப்புகளும் வெகு சிறப்பாகவும், பல தகவல்களை வழங்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இவர்களின் படைப்புகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பாரம்பரிய கலையை புதிய வடிவங்களில் வெளிப்படுத்துகிறது. இந்த கண்காட்சி மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.
கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதில் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி முதல்வர் ரவி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார், அரசு கவின் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஓவியர் சிங்காரவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை ஒட்டி மாணவி ஆர்.துர்கா பைபரில் உருவாக்கியிருந்த வயநாடு நிலச்சரிவின் போது யானைக்கூட்டத்தின் மத்தியில் பாதுகாப்பாக இருந்த மூதாட்டி மற்றும் அவரது பேத்தி குறித்த படைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இந்த மாணவி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் உருவப்படத்தை அவரது பெயரை வைத்து 6 மணிநேரம் 20 நிமிடத்தில் வரைந்து பரிசாக கொடுத்து அசத்தி உள்ளார். இதுகுறித்து மாணவி துர்கா கூறுகையில், ஒரு விழாவில் தன் அம்மா பற்றி கலெக்டர் பேசியது மிகவும் முன்னுதாரணமாக இருந்தது. அதனால் அவரது உருவத்தின் அவுட்லைனை 6 மணிநேரம் வரைந்து 20 நிமிடத்தில் அவரது பெயர் மற்றும் பதவியின் எழுத்துக்களை கொண்டு முடித்தேன். இதை பார்த்த கலெக்டர் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் என்று தெரிவித்தார். இதேபோல் வயநாடு மூதாட்டி சம்பவத்தின் பைபர் சிற்பத்தை களிமண்ணை வைத்து அச்சு எடுத்து பின்னர் பைபரில் செய்து முடித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் விஷூவல் கம்யூனிகேஷன் கடைசி ஆண்டு மாணவர் சக்திவேல் (27) செய்திருந்த அச்சு அசல் கும்பகோணம் வீட்டின் டைரோமா மினியேச்சர் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. கும்பகோணம், காரைக்குடி பகுதியில் பழமையான, பாரம்பரிய வீட்டை அப்படியே தத்ரூபமாக டைரோமா மினியேச்சரில் செய்திருந்தார். இதற்கு அவருக்கு 6 மாத காலம் ஆனது என்று தெரிவித்தார். மேலும் இதுபோன்று திரைப்படத்துறையில் செட் ப்ராப்பர்ட்டியாக செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

