நாச்சியார் கோயில் ஆகாச மாரியம்மன் கோயில் திருவிழா... புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழாவில் விசேஷ புஷ்ப பல்லக்கில் பவனி வந்த அம்மனை பலவிதமான நறுமண உதிரி பூக்களைத் தூவி பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழாவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில் பவனி வந்த அம்மனை பலவிதமான நறுமண உதிரி பூக்களைத் தூவி பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ளது ஆகாச மாரியம்மன் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில், சமயபுரத்திலிருந்து மாரியம்மன் மல்லிகைப்பூவுக்கும், கைவளையலுக்கும் ஆசைப்பட்டு ஆண்டிற்கு 15 தினங்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.
இத்தலத்தில் ஆண்டு முழுவதும் கருவறையில் அம்மன் உருவம் இல்லாமல் அருவமாக ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்கும். இதனையே அம்மனாக வழிபட்டு வருவர். இந்தாண்டு வைகாசி திருவிழாவினையொட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அரசலாற்றில் இருந்து செப்புக்குடத்தில் வைத்து கரகம் எடுத்து வந்து அதன் மீது நாணல் கொண்டு திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில் வைத்து ஆகாச மாரியம்மனாக அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில் அம்மனை எழுந்தருள செய்து, நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க, திருநறையூர் மற்றும் நாச்சியார்கோவில் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. அப்போது திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, புஷ்ப பல்லக்கில் இருந்து ஆகாச மாரியம்மனை, நாதஸ்வர மேள தாளம் முழங்க, ஏராளமான பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆடி அசைந்து கோயிலுக்கு தூக்கி வரும்போது, இருபுறமும் வெண்சாமரம் வீச, நூற்றுக்கணக்கான கண்ணாடி கைவளையல்கள் அடங்கிய கொத்தை முன்னெடுத்து வரவேற்று சென்றனர். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மல்லிகையை பிரதானமாக கொண்டு, பலவிதமான நறுமண பூக்களை தூவி மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, இராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் தினமும் காட்சியளிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பெரிய திருவிழாவும், 7ம் தேதி சிறிய தேரில் அம்மன் நின்றிருந்த திருக்கோலத்தில் வீதியுலாவாக வருவார். இதையடுத்து சமயபுரம் எழுந்தருளுடன் இந்தாண்டிற்கான விழா இனிதே நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவில் தினமும் ஏரளாமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர்.