தஞ்சாவூர் : ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவுடன் நடைபெற்றது சப்தஸ்தான பெருவிழா கொண்டாட்டம்
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று சப்தஸ்தான பெருவிழா நடந்தது.
மிகவும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று சப்தஸ்தான பெருவிழா நடந்தது. இதில் ஏழூர் சுவாமிகளும் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.
சப்தஸ்தான விழா அல்லது ஏழூர்த் திருவிழா என்பது ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா ஆகும். இவ்விழா தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவாகும். இவ்விழாவின் போது ஒரு கோயில் முதன்மைக் கோயிலாக அமைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அமைவது தொடர்புடைய கோயில்களுக்கு அந்தந்த பல்லக்குகள் சென்று வரும் நிகழ்வாகும்.
ஆண்டுதோறும் இத்திருவிழாவின் போது முதன்மைக் கோயிலிலிருந்து பல்லக்கு கிளம்பி பிற ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, நிறைவாக கிளம்பிய தலமான முதன்மைக் கோயிலுக்கு வந்து சேருவது மரபாக உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சப்தஸ்தானத் திருவிழாக்களில் முக்கியமானது திருவையாறு சப்தஸ்தானம் ஆகும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் இறைவனும், இறைவியும் உலா கிளம்பி திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறுத்தலங்களுக்கும் சென்று பின்னர் திருவையாற்றில் இறைவனுக்குப் பூப்போடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறும். திருமுறைகள் ஓதிக்கொண்டு பல்லக்குடன் பக்தர்கள் செல்வர்.
திருவையாறில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு சித்திரை விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் தேதி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமி திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் எழுந்தருளினர்.
பின்னர் கடந்த 13-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழாவின் தொடக்கமாக, நேற்று ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டனர். அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி வழியாக சென்று, நேற்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் 7 ஊர் பல்லக்குகளும் சங்கமித்தது. தொடர்ந்து நேற்றிரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வானவேடிக்கை நடைபெற்றது.
இன்று காலை (மே 17-ம் தேதி) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 7 ஊர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோயிலுக்கு சென்று தீபாரதனை முடிந்துடன், அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை 27-வது தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி, சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
படவிளக்கம்: தஞ்சை அருகே திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சப்தஸ்தான பெருவிழாவின்போது ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டார்.