அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்... மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர் கூறியதுபோல், திங்கள் தோறும் உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500ம், மருத்துவப்படி ரூ.500ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர். அவரின் வாழ்விணையர், திருமணமாகாத மகள், விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது.
2025-2026ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் 16.04.2025 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்பொழுது, ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை 100 இலிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வாணையின்படி அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2025-2026ஆம் ஆண்டிற்கு (tamilvalarchithurai.org/agavai) வலைதளம் வாயிலாகவும் மூல விண்ணப்பம் நேரிலும் வரவேற்கப்படுகின்றன.
மகளிர் உரிமைத் தொகை. சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. 01.01.2025 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.120,000க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்.
தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டல, மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை, உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithuraitn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட மூல விண்ணப்பத்தை நேரிலும் tamilvalarchithuraiorgagavai என்ற வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பம் செய்வது கட்டாயமாகும்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர் கூறியதுபோல், திங்கள் தோறும் உதவித்தொகையாக ரூ.7500ம் மருத்துவப்படி ரூ.500ம் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். படிவத்தில் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 17.11.2025க்குள் அளிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















