ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இதுவரை 4 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின். இவரை கடந்த 5-ம் தேதி ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின். இவரை கடந்த 5-ம் தேதி ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த உடையாளூர் புதுத்தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (30) போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து திருவிடைமருதூர் வட்டம், சன்னாபுரம் ரயில்வே கேட் பகுதியில் பதுங்கி இருந்த ம.க.ஸ்டாலினின் எதிரியின் சகோதரரும், கிழதூண்டில் விநாயகன் பேட்டை, சுக்கிரவார கட்டளைத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மகேஷ் (42) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் மருதுபாண்டி (32) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து புதுக்கோட்டை சிறையிலடைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் உளவு பார்த்து தகவல் கூறியதாக திருவிடைமருதூரை சேர்ந்த சஞ்சய் (22), சேரன்(27) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:
கோவை மாவட்டம். சூலூர் காவல் நிலையத்திற்க்குட்ப்பட்ட பகுதியில், ம.க.ஸ்டாலின் தரப்பினரால், மாதவன் என்பவரை 2015ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாதவனின் மகன் மற்றும் இதில் தொடர்புடையவர்களை தேடி வருகிறோம். இதே போல் அவர்களுக்கு உளவு பார்த்ததாக 2 பேரை கைது செய்துள்ளோம் என்றனர்.





















