ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி: திருவாரூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு..!
ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக அரசு மேல்நிலைப் பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆய்வக கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 190 மாணவர்கள், 165 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் புள்ளமங்கலம், வடபதிமங்கலம், ஊட்டியாணி, மணக்கரை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.51.44 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் கட்டிட பராமரிப்பு மற்றும் கட்டுமானத்துறை மூலம் ஆய்வக கட்டிடம் மற்றும் வகுப்பறை கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வகக் கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்கள் பில்லர் இல்லாமல் கட்டபட்டதால் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே இதனை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுப்பணி துறையின் மூலம் கட்டப்படும்கட்டிடங்கள் சுமார் 60 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போதைய இந்த கட்டிடம் 15 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், இந்த கட்டிடத்தை இடிக்க முடியாது என தெரிவித்து பொதுப்பணி துறையினர் கட்டிடத்தை அகற்ற மறுக்கின்றனர். எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விடும் என்ற அச்சத்தில் பள்ளி இடைவேளை நேரங்களில் கட்டிடத்தின் அருகாமையில் செல்ல கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து நமது ஏபிபி நாடுவில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்த செய்தியின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பொதுப்பணி துறையின் கட்டிட பராமரிப்பு மற்றும் கட்டுமான பிரிவு அதிகாரிகள் ஆகியோர் புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆய்வக கட்டிடத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிட தன்மையின் வலுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஏற்கனவே அரசு அறிவுறுத்தலின்படி மிகவும் மோசமாக உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறைக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்