Abp Nadu Impact: ஏபிபிநாடு செய்தி எதிரொலி: தஞ்சையில் சாலையில் பேட்ச் ஒர்க் மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறையினர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தஞ்சை மாவட்டம் புது கல்விராயன்பேட்டை சாலையில் இருந்த பள்ளங்களில் ஜல்லிகள் கொட்டப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது.
தஞ்சாவூர்: ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தஞ்சை மாவட்டம் புது கல்விராயன்பேட்டை சாலையில் இருந்த பள்ளங்களில் ஜல்லிகள் கொட்டப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது.
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே உள்ளது புதுகல்விராயன்பேட்டை. இப்பகுதியிலிருந்து சித்திரக்குடி செல்லும் சாலை மிகவும் சீர்கேடாக பள்ளம், படு குழியாக இருந்தது. இந்த சாலை வழியாக தினமும் வண்ணாரப்பேட்டை, 8. கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான கார், ஆட்டோ, லோடுவேன், லாரி, டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இருச்சக்கர வாகனத்தில் இரவில் இந்த சாலை வழியாகத்தான் ஊருக்கு திரும்புகின்றனர். இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் இந்த சாலையில் பல இடங்கள் பழுதடைந்து இருந்ததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை இருந்தது.
எனவே புது கல்வியராயன் பேட்டையிலிருந்து சித்திரக்குடி வரை பழுதான நிலையில் பள்ளமாக மாறியுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தியை ஏபிபி நாடு வெளியிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதுகல்விராயன்பேட்டை – சித்திரக்குடி சாலையில் இருந்த பள்ளங்களில் சிமெண்ட் கலந்த ஜல்லிக்கற்கள் போடப்பட்டு பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டது. விரைவில் இந்த சாலை புதுப்பிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தி வெளியிட்ட ஏபிபி நாடு நிர்வாகத்திற்கும், நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.