ஊராட்சி ஒன்றியத்தில் மோசடி: ஆணையர், பொறியாளர்கள் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்!
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் மோசடி புகாரில் ஒன்றிய ஆணையர், பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், சாலை, குடிநீர், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி வீடுகள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தெரு விளக்கு உள்ளிட்ட பல நலத்திட்ட பணிகள் வேலை செய்யாமலே கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், ஒரே பணியை இரண்டு பெயரில் பில் போட்டு மோசடி செய்ததாகவும் இதனால் காரணமாக 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து சென்னை கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் மற்றும் திருவாரூர் மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா ஆகியோர் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்டு கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ததில் 25 லட்சத்து 82 ஆயிரத்து 606 ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஊரக வளர்ச்சித்துறை முறைகேடு குறித்து 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துறைத்தனர்.
மயிலாடுதுறை: வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க வடிகாலை தூர்வார பொதுமக்கள் வேண்டுகோள்!
அதனையடுத்து விசாரணை அறிக்கை அடிப்படையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மாதங்களில் பணியில் இருந்த ஊராட்சி ஒன்றிய ஆணையராக பணியாற்றிய சரவணன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், தெய்வானை, பூரணச்சந்திரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் அன்பழகன், அகிலா, ராஜ்குமார் ஆகியோரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இவ்வாறான ஊழல் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இதே போன்று ஊழல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும், இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஆய்வு செய்து மக்கள் வரி பணத்தை சுரண்டும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X