உரிமம் இல்லைங்க... 31 ஆயிரம் கிலோ உரங்களை பறிமுதல் செய்த வேளாண் அதிகாரிகள்: தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூர் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமான பொருள் இருப்புக் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் இன்று வேளாண் உதவி இயக்குனர் செல்வராசு மற்றும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர்

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் இன்று வேளாண் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடியில் ஒரு குடோனில் உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த 31000 கிலோ உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை
தஞ்சாவூர் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமான பொருள் இருப்புக் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் இன்று வேளாண் உதவி இயக்குனர் செல்வராசு (தரக்கட்டுப்பாடு ) மற்றும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு குடோனில் எந்தவித உரிமமும் இன்றி வைத்திருந்த 30900 கிலோ உரங்கள் மற்றும் 550 லிட்டர் திரவ உரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வராசு ( தரக்கட்டுப்பாடு ) நிருபர்களிடம் கூறியதாவது:-

உரிமம் இல்லாத 30900 கிலோ உரம்
தஞ்சாவூர் அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தோம். அதில் ஒரு குடோனில் எந்தவித உரிமமும் இன்றி வைக்கப்பட்டிருந்த 30900 கிலோ உரம் மற்றும் 550 லிட்டர் திரவ உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் இதுபோன்று உரிமம் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள உரங்களை வாங்க கூடாது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட உரங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். அந்த ஆய்வின் முடிவு வந்த பிறகு இது போலி உரமா ? அல்லது பயன்படுத்தக்கூடிய உரமா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சையில் உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த உரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சீனாவிலிருந்து 1340 டன் யூரியா தஞ்சைக்கு வருகை
சம்பா மற்றும் தாளடி நெல்சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் 1,340 டன் சீனாவிலிருந்து தஞ்சாவூர் கொண்டுவரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2,37,500 ஏக்கரில் நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைத்திட வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உர நிறுவனங்களிடமிருந்து தேவையான உரங்களை ரயில் மூலம் வரவழைத்து விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தேவையான யூரியா உரம் சீனாவிலிருந்து கப்பல் மூலம் இறக்கமதி செய்யப்பட்டு, மத்திய அரசு உர நிறுவனமான இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனம் வாயிலாக, ஆந்திராவில் உள்ள கங்காபுரம் துறைமுகத்துக்கு வந்தது. அந்த உரங்களை 50 கிலோகொண்ட மூட்டைகளைக பிரிக்கப்பட்டு அங்கிருந்து 21 ரயில் வேகன்களில் ஏற்றப்பட்டு நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த உரங்களை 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களுக்கு வேளாண்மை துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) செ.செல்வராஜ் கூறியது: சீன நாட்டிலிருந்து 1,340 டன் யூரியா உரம் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளது. அதே போல் என்எஃப்எல் நிறுவனத்திலிருந்து 3,017 டன் ஆர்சிஎப் யூரியா உரமும் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே யூரியா உரம் 6,984 டன், டிஏபி 1,593 டன், பொட்டாஷ் 1,985 டன், காம்ப்ளக்ஸ் 4,023 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 1,441 டன் ஆகியவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து விவசாயிகளும் தேவையான யூரியா உரத்தினை வாங்கி பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்தி பயன்பெறலாம் என்றார்.





















