Thanjavur : தூர்வாரப்படாத ஏரிகள்.. நீரில் மூழ்கிய பயிர்கள்! வேதனையில் விவசாயிகள்..
TN Rain : தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில் வடிகால் நிரம்பி வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில் வடிகால் நிரம்பி வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீரில் மூழ்கிய பயிர்களை வேளாண் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் பார்வையிட்டனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை:
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதில் தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது.
மழைநீரில் மூழ்கிய பயிர்கள்:
இதனால் வடிகால் வாய்க்கால்கள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கல்விராயன் பேட்டை, புதுகல்விராயன் பேட்டை பகுதியில் சாலைகளில் சுமார் 2 அடி உயரத்திற்!கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயல்களை சூழ்ந்தது. இதனால் இப்பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான சாகுபடி வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: GK Mani: "ஒரே நாடு.. ஓரே தேர்தல்.. நல்ல திட்டம்! ஆனால் ஒரு சிக்கல் இருக்கு.. ட்விஸ்ட் வைக்கும் ஜி.கே மணி
பார்வையிட்ட அதிகாரிகள்:
தகவலறிந்த வேளாண் இணை இயக்குனர் வித்யா, உதவி இயக்குனர் (பொ) இந்திரஜித், உதவி அலுவலர் சுரேஷ் ஆகியோர் நேரடியாக கல்விராயன்பேட்டை பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ள பயிர்களை எடுத்து காண்பித்தனர். தொடர்ந்து இதற்கு உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். அடுத்தடுத்து மழையால் சாகுபடி பயிர்களை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதேபோல் குருங்குளம் உட்பட பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட சாகுபடி வயல்களை வேளாண் இணை இயக்குனர் வித்யா பார்வையிட்டார்.மேலும் தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டை ஏரி உடைப்பு ஏற்பட்டு வாய்க்கால் தூர்வாராததால் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களில் மழை நீர் புகுந்தது.
இதையும் படிங்க : மேடையிலே போஸ் வெங்கட்டை பொளந்து கட்டிய தவெக நிர்வாகி! அப்படி என்ன சொன்னாரு?
நிரம்பிய ஏரிகள்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் சுமார் 23,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா செல்லப்பன் பேட்டை ஊராட்சியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரிகள் முழுமையாக நிரம்பின. நிரம்பிய ஏறி சாலையில் வடிந்தோடி வடிகால் வாய்க்காலில் தண்ணீர் புகுந்தது.
இதனால் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததால் தண்ணீர் வடிய முடியாமல் நீர் அப்படியே விலை நிலங்களுக்குள் புகுந்து நடவு நட்டு ஒரு மாத காலம் ஆன நிலையில் நடவு நட்ட பயிர் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர்.
தண்ணீர் வடிந்தாலும் மறு சாகுபடி செய்து தண்ணீர் வருமா என்ற கேள்விக்குரியில் உள்ள விவசாயிகள், உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி அரசு நிவாரணம் வழங்க வேண்டும், வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் தண்ணீர் வடிய வழியில்லாமல் உள்ள நிலையில் மழை தொடர்ந்தால் சம்பா, தாளடி சாகுபடி முழுமையாக பாதிக்கப்படும். இதனால் ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகள் இதனால் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். எனவே விவசாயிகளின் நலன்கருதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.