Zomato Controversy| தமிழர்களின் மரபு சுயமரியாதையே... பணியாளரை மீண்டும் பணியமர்த்த எழுந்த கோரிக்கைகள்... சொமேட்டோ எடுத்த முடிவு
ரிஜக்ட் சோமாட்டோ ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் அறிவித்தது சோமாட்டோ..
சொமேட்டோ நிறுவனம் பணிநீக்கம் செய்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு விகாஷ் என்பவர் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் இதே கோரிக்கையை முன்வைத்த நிலையில் அந்த ஊழியரை மீண்டும் பணியமர்த்தியது சொமேட்டோ நிறுவனம்
தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் நேற்று சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு உணவு முழுமையாக கிடைக்காமல் பாதி பொருட்கள் மட்டுமே வந்துள்ளது. பொதுவாக இது போன்ற சமயங்களில் நமக்கு வந்த உணவு பார்சல் குறித்து சோமேட்டோ சாட் பாக்சில் முறையீடு செய்யலாம். அவர்கள் போட்டோ ஆதாரம் கேட்பார்கள். அதை கொடுக்கும் பட்சத்தில் ரீபண்ட் நமக்கு வரும். ஆனால் சோமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சாட் பாக்சில் பேசிய நபர் விகாஷுக்கு ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார். நாங்கள் உணவு நிறுவனத்திடம் பேசினோம், அப்படி தகவல் எதுவும் வரவில்லை, டெலிவரி பாயிடமும் பேசினோம் என்று சோமேட்டோ கஸ்டமர் கேர் அதிகாரி கூறியுள்ளார். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என்றும் சோமேட்டோ அதிகாரி விகாஷிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் விகாஷ், நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அந்த சோமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று திமிராக பதில் அளித்துள்ளார். இதை ட்விட்டரில் பகிர்ந்து விகாஷ் சோமேட்டோ நிறுவனத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்தி பற்றி உங்கள் கஸ்டமர் கேர் அதிகாரி பாடம் எடுக்கிறார். இதுதான் நீங்கள் கஸ்டமர்களை நடத்தும் விதமா என்று கேள்வி எழுப்பினார். இந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையம் முழுக்க வைரலான நிலையில் பலரும் சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழர்கள் மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்தவர்கள், வங்காளிகள், மலையாளிகள் கூட இதில் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #Reject_Zomato என்ற டேக் தற்போது இணையம் முழுக்க ட்ரெண்டானது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரிஜக்ட் சோமாட்டோ ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் அறிவித்தது சோமாட்டோ..
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளுமாறு சொமேட்டோ நிறுவனத்திற்கு விகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தப் பிரச்சினை தொடர்பான தெளிவுபடுத்தலைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட ஊழியரை பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக மீண்டும் பணியமர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர்களுக்கு முறையான பயிற்சியளிக்க நான் பரிந்துரைக்கிறேன். தமிழர்களின் மரபு சுயமரியாதை யே தவிர பழி வாங்குதல் அல்ல” என பதிவிட்டுள்ளார்.
Hello @zomato. Apart from the clarification regarding the issue, I request you to reconsider on recruiting back the employee rather than terminating. I suggest to give them a proper training instead.
— Vikash (@Vikash67456607) October 19, 2021
தமிழர்களின் மரபு சுயமரியாதை யே தவிர பழி வாங்குதல் அல்ல.@zomatocare. Thanks🖤
இணையத்தில் மேலும் சிலர் இதே கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் அந்த ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாக சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள பதிவில், “நினைவில் கொள்ளுங்கள், எங்கள் கால் செண்டரில் உள்ளவர்கள் இளைஞர்கள், அவர்கள் தங்களது கற்றல் மற்றும் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் உள்ளனர். அவர்கள் மொழிகள் மற்றும் பிராந்திய உணர்வுகளில் நிபுணர்கள் அல்ல. நானும்தான். நாம் அனைவரும் ஒவ்வொருவரின் குறைபாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒருவருக்கொருவர் மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை எவ்வளவு நேசிக்கிறோமோ அதே அளவுக்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நேசிக்கிறோம். நாம் எவ்வளவு வேறுபடுகிறோமோ அதே அளவுக்கு ஒன்றாகவும் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
An ignorant mistake by someone in a support centre of a food delivery company became a national issue. The level of tolerance and chill in our country needs to be way higher than it is nowadays. Who's to be blamed here?
— Deepinder Goyal (@deepigoyal) October 19, 2021