World Earth Day 2025: மனிதர்கள் இல்லாத பூமி.. எப்படி இருக்கும் தெரியுமா ? மீண்டும் மனித இனம் உருவாகுமா ?
world earth day 2025: இன்று உலக பூமி தினம், மனிதர்கள் இல்லாத பூமியை எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

உலக புவி நாள் (Earth Day), ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று, புவியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இயற்கை வளங்களை நிலைப்படுத்தவும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. மனிதர்களால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால், ஒரு கற்பனைக் கேள்வியை எழுப்புவோம், பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் திடீரென அழிந்தால், பூமி எப்படி மாறும் ? மனித இனத்திற்கு மாற்றாக மற்றொரு புத்திசாலித்தனமான இனம் உருவாக வாய்ப்பு உள்ளதா? மீண்டும் மனித இனம் உருவாக முடியுமா? என்ற கற்பனை கேள்விகள் அனைவருக்குமே உருவாகும். மனிதர்கள் அழிந்த பிறகு என்னதான் நடக்கும் என்பது குறித்து, இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
மனிதர்கள் இல்லாத பூமி:
மனிதர்கள் பூமியில் தோன்றியதிலிருந்து, குறிப்பாக தொழில்புரட்சிக்குப் பிறகு, பூமியின் இயற்கை அமைப்பை பெருமளவில் மாற்றியமைத்துள்ளனர். காடுகள் அழிப்பு, மாசுபாடு, காலநிலை மாற்றம், மற்றும் உயிரின அழிவு ஆகியவை மனித செயல்பாடுகளின் மிக மோசமான விளைவுகளாக இன்றளவும் இருந்து வருகின்றன.
முதல் நூறாண்டுகளில் என்ன நடக்கும் ?
இயற்கை தன்னைத்தானே மீட்டெடுக்க ஆரம்பிக்கும்.தொழிற்சாலைகள், வாகனங்கள், மின்சார உற்பத்தி ஆகியவை நின்றவுடன், காற்று மாசு விரைவாகக் குறையும். நகரங்களில் உள்ள கட்டிடங்கள், சாலைகள், மற்றும் பாலங்கள் மழை, காற்று, மற்றும் தாவரங்களால் உடைக்கப்படும். புற்கள், கொடிகள், மற்றும் மரங்கள் நகரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கும். நீர்நிலைகள் மாசு குறைவதால் தூய்மையடையும்.
நகரத்தில் மனிதர்களால் பழக்கப்பட்ட விலங்குகள் உணவை தேதி காடுகளுக்கு செல்லும், மறுபுறம் காட்டில் இருக்கும் விலங்குகள் மனிதர்கள் வாழ்ந்த நகர் பகுதியில் வரலாம். மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் செழித்து வளரும்.
வனவிலங்குகள், மனிதர்களின் தலையீடு இல்லாமல், தங்கள் வாழ்விடங்களை மீட்டெடுக்கும். புலிகள், யானைகள், மற்றும் பறவைகள் மனித ஆதிக்கத்தால் இழந்த பகுதிகளை மீட்டெடுக்கும். ஆனால் மனிதன் விட்டுத் சென்ற எச்சங்கள், பெரும்பளவு அப்படியே இருக்கும்.
ஆயிரம் ஆண்டுகளில் மனித தடயங்கள் மங்கத்தொடங்கும்
பெரும்பாலான மனித கட்டமைப்புகள் (மரம், இரும்பு, கான்கிரீட்) சிதைந்து, மண்ணுடன் கலந்துவிடும். மிகப்பெரிய கல்கட்ட அமைப்புகள் மட்டும், அடையாளமாக எஞ்சின் நிற்கலாம். பிளாஸ்டிக் மற்றும் கதிரியக்கக் கழிவுகள் (அணு உலை கழிவுகள்) புவியியல் அடுக்குகளில் புதைந்திருக்கும். காலநிலை, மனிதர்களால் உமிழப்பட்ட கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்படுவதால், இயற்கையான சமநிலையை நோக்கி நகரும்.
பத்தாயிரம் ஆண்டுகளில் எல்லாம் சரியாகிவிடும் ?
நகரங்கள் முற்றிலும் காடுகளாக மாறிவிடும். பூமியின் மேற்பரப்பு காடுகள், புல்வெளிகள், மற்றும் பாலைவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும். உயிரினங்கள் புதிய பரிணாமப் பாதைகளில் பயணிக்கலாம். மனிதர்களால் உருவாக்கப்பட்ட செடிகள் மற்றும் விலங்குகள் இயற்கையுடன் ஒன்றிணைந்து, புதிய இனங்களாக உருவாகலாம். கடல்கள் மற்றும் ஆறுகள் முழுமையாகத் தூய்மையடைந்து, பவளப்பாறைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் செழித்து வளரும்.
புதிய பூமி மனிதர்களின் எச்சங்கள் பெரும்பாலும் மறைந்து, பிளாஸ்டிக் மற்றும் கதிரியக்கக் கழிவுகள் புதைப்படிவங்களாக மாறலாம். புவியின் மேற்பரப்பு மனிதர்களுக்கு முந்தைய நிலைக்கு நெருக்கமாக இருக்கும்.புதிய உயிரினங்கள் தோன்றலாம், மனிதர்களால் அழிக்கப்படாத பல்லுயிர் அமைப்பு செழித்து வளரும்.
மனித இனத்திற்கு மாற்றாக புத்திசாலித்தனமான இனம் உருவாக வாய்ப்பு உள்ளதா?
மனிதர்கள் இல்லாத பூமியில், மற்றொரு புத்திசாலித்தனமான இனம் (sentient species) உருவாக வாய்ப்பு உள்ளதா என்பது சிக்கலான கேள்வி. புத்திசாலித்தனம் என்பது பரிணாமத்தில் அரிதான மற்றும் சிக்கலான மாற்றமாகும். மனிதர்களின் புத்திசாலித்தனம், மூளையின் அளவு, சமூக அமைப்பு, மொழி, மற்றும் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் ஆகியவற்றின் கலவையால் உருவானது.
மற்றொரு இனம் இதேபோன்ற பாதையைப் பின்பற்ற வேண்டுமானால், பல காரணிகள் ஒருங்கிணைய வேண்டும். மனிதர்களைப் போன்று மற்றொரு புத்திசாலி உயிரினம் மீண்டும் உருவாகுவது என்பது மிகவும் அரிதிலும் அரிதான செயல். அதேபோன்று பரிணாமம் எப்போதும் புத்திசாலித்தனத்தை நோக்கி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாற்றாக வேறு வடிவத்திலும் பரிணாம இருக்கலாம்.
மீண்டும் இதை செய்யும் இயற்கை ?
மீண்டும் மனித இனம் உருவாக வாய்ப்பு உள்ளதா என்பது மிகவும் சிக்கலான கேள்வி. அதற்கான வாய்ப்புகள் என்பது மிக மிகக் குறைவுதான். மனிதர்களின் மிக நெருக்கமான உறவினர்களான சிம்பன்சிகள், கோரில்லாக்கள், மற்றும் பிற பெரிய குரங்குகள் இன்னும் இருந்தால், அவை மனிதர்களுக்கு ஒப்பான பரிணாமப் பாதையைப் பின்பற்றலாம்.
ஆனால், இதற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். மனிதனால் இது போன்ற விலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது, இதுவும் மனித இனம் போன்ற மற்றொரு இனம் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை குறைத்து விடும். பரிணாமம் மீண்டும் மனிதர்களை உருவாக்குவதற்கு பதிலாக, முற்றிலும் வேறுபட்ட புத்திசாலித்தனமான இனத்தை உருவாக்கலாம்.
மனிதன் இல்லாத பூமி
மனிதன் உயிர் வாழ தான் பூமி என்ற தேவைப்படுகிறது. ஆனால் பூமிக்கு மனிதன் தேவையா என்றால், மனிதனின் மோசமான செயல்கள் பூமிக்கு மனிதன் தேவையில்லை என்பதே காட்டுகிறது. இந்த கற்பனை கதை நமக்கு உணர்த்துவது ஒன்றுதான், பூமியில் வாழும் மனிதர்கள் பொறுப்புடன் வாழ வேண்டும்.
மனிதர்கள் இல்லாத பூமியில், மாசு தானாகவே குறையும். ஆனால், இப்போது நாம் மாசு குறைப்பு முயற்சிகளை மேற்கொண்டால், இயற்கையின் மீட்சி வேகமாக இருக்கும். இப்போதே காலநிலையை எதிர்த்து போரிட்டால், பூமியை மீண்டும் பழையபடிக்கு மாற்றிவிடலாம்.
மனிதர்களாகிய நாம், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதன் மூலம், பூமியை எதிர்கால சந்ததியினருக்கு செழிப்பானதாக விட்டுச் செல்ல முடியும். இந்த உலக புவி நாளில், புவியைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க உறுதியேற்போம்!





















