Whatsapp DP : மாணவிகள் வாட்ஸ்-அப் DP புகைப்படம் வைக்கக்கூடாது.. மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேச்சு
கல்லூரி மாணவிகள் வாட்ஸ் அப் DPஇல் புகைப்படம் வைக்கக்கூடாது என மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகள் DP-யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம் டெக்னாலஜி எவ்வளவு நன்மை செய்து இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் செய்து கொண்டிருக்கிறது அதனை எப்படி கையாள வேண்டும் என்பது முக்கியம். மகளிர் ஆணையத் தலைவர் குமாரி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இணைந்து பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி தலைமையில் சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆர்கே நகர், திருவெற்றியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர் . இதில் சிறப்பு விருந்தினராக வடசென்னை மாவட்ட சமூக அலுவலர் ஹரிதா, சென்னை பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சி கழகம் இயக்குனர் மற்றும் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து ஆலோசனைகளையும் அறிவுரைகளை அவர்கள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவர் குமாரி, “ இன்று உலகத்தை ஆட்டி படைக்கின்ற சைபர் கிரைம் குறித்து பிரச்சனைகளுக்கு பெண்களுக்கு சோசியல் மீடியாவில் இருக்கின்ற பிரச்சனைகளை குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். பெண்களுக்கான சட்டங்கள் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன மகளிர் ஆணையத்திற்கு சைபர் கிரைம் குறித்து அதிக புகார்கள் வருகின்றன, அவற்றையெல்லாம் முன்பு போல ஏதாவது காரணத்தைக் கூறி தட்டி கழிக்காமல் உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மாணவிகள் இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப், பேஸ்புக் DP யில் படங்களை வைக்காதீர்கள். அதை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள் என்று எச்சரித்தார். காதல் செய்வது அவர்கள் உரிமை. ஆனால் தகுந்த நபரை பார்த்து காதலிக்க வேண்டும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் பேசும்பொழுது ஆடியோ ரெக்கார்ட் செய்து வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். டெக்னாலஜி எவ்வளவு நன்மை செய்து இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் செய்து கொண்டிருக்கிறது அதனை எப்படி கையாள வேண்டும் என்பது முக்கியம். அதை கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்து வருவதாக மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்துள்ளார்.