லாரி மோதி பெண் பலி : இரண்டாவது நாளாக உறவினர்கள் சாலை மறியல்
செய்யூரில் லாரி மோதியதில் உடல் நசுங்கி பலியான பெண்ணின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, அப்பெண்ணின் உறவினர்கள் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்தவர் மணி. கூலித்தொழிலாளியான அவரின் மகள் லட்சுமி. அவருக்கு வயது 40. இந்த நிலையில், நேற்று செய்யூர் அரசு பள்ளிக்கு அருகில், எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்ட லாரி ஒன்று அதிவேகமாக வந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி மீது மோதியது. இதில், லாரி மேலே ஏறியதில் லட்சுமி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து, லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், லட்சுமியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி மக்களும், அவரது உறவினர்களும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்றும் லட்சுமியின் மரணத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அவரது உறவினரும், அப்பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், முழு கடையடைப்பும் நடத்தினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. பின்னர், அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக இதுபோன்ற விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.