Economists on Corona Vaccines rate | தடுப்பூசியின் விலை எவ்வளவு இருக்கலாம்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
நாட்டின் 80 சதவிகித மக்களுக்கு கோவிஷீல்ட் செலுத்தப்பட்டுள்ளது, 47 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். இந்த நிலையில் இந்தத் தடுப்பூசி விலை நிர்ணயம் சரியா அல்லது தடுப்பூசிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை எவ்வளவு இருக்கலாம்? பொருளாதார நிபுணர்களிடம் கேட்டறிந்தோம்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே மாதம் 1-ஆம் தேதி முதல் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கும் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தனது தடுப்பூசிகளின் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. அரசு மருத்துவமனைகளுக்கு விற்கப்படும் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ 400/- எனவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.600 எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும் உலக நாடுகளின் தடுப்பூசி விலைப்பட்டியலுடன் ஒப்பிட்டு மிகக்குறைந்த விலையில் தாங்கள் தடுப்பூசி விற்பதாக அதில் சீரம் இண்ஸ்ட்டியூட் நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது.
மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி மே மாதம் முதல் 18 -45 வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஆனால் 45 மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அரசின் இலவச தடுப்பூசி கிடைக்கும் எனச் சொல்லப்பட்டது. பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விலைகொடுத்தே தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்கிற சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம், அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டும் 18 வயது தொடங்கி அனைவருக்குமே இலவச தடுப்பூசி என அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இருப்பினும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா என நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் இதர மாநிலங்களின் கதி என்ன? இந்தத் தடுப்பூசி விலை நிர்ணயம் சரியா அல்லது தடுப்பூசிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை எவ்வளவு இருக்கலாம்? பொருளாதார நிபுணர்களிடம் கேட்டறிந்தோம்.
”தடுப்பூசி செலுத்தவேண்டிய சூழல் வந்தால் ரூ.400 என்பது ஒரு பொருட்டே அல்ல” - ஸ்ரீராம் சேஷாத்ரி, பொருளாதார ஆய்வாளர்
”உலகளாவில் கொரோனா தடுப்பூசி சராசரியாக 20 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விற்பனை விலை மிகமிகக் குறைவுதான். சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்துக்கு தடுப்பூசி தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு மட்டுமே பல கோடிகளை எட்டியிருக்கிறது. தடுப்பூசி மூலப்பொருள்களான சிலிகான் குப்பியைக் கூட அந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. இதுதவிர தடுப்பூசியில் இருக்கும் மருந்தாக்கக்கூறுகளுக்கான (Active Pharma Ingredients) செலவு, தடுப்பூசி உட்பொருட்களுக்கான முதன்மை உரிமையாளரான ஆக்ஸ்பார்ட் அஸ்ட்ராஜெனகாவுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி கட்டணம், தடுப்பூசி பரிசோதனைக்கான செலவுகள் என இத்தனை முதலீடுகளையும் சேர்த்து கணக்கு செய்துபார்த்தால் விற்கப்படும் விலை மலிவானதுதான். மேலும் சுமார் 15 கோடி தடுப்பூசிகள் வரை உற்பத்தி விலையான ரூ.150-ஆகவே அந்த நிறுவனம் அரசுக்கு வழங்கி இருக்கிறது. தொழிற்சாலை அமைத்து உற்பத்திசெய்யும் நிறுவனம் இதற்குப்பிறகும் லாப நோக்கத்தில் விற்பதில் எந்தவிதத்தவறும் இல்லை.
தனியாரில் வசதி வாய்ப்புள்ளவர்கள்தான் தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு டோஸ் ரூ.600-க்கு விற்கப்படுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை. மற்றொருபக்கம் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியில் 50 சதவிகித கொள்முதலை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாகவே வழங்க இருக்கிறது. இப்படியிருக்கும் போது தனிமனிதருக்குத் தடுப்பூசி கிடைப்பதற்கான சிக்கல் இருக்காது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற சூழல் உண்டாகும்போது எந்த விலையாக இருந்தாலும் போட்டுக்கொண்டுதான் ஆக வேண்டும். நாளை ஃபைசர்- மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள் இங்கே அங்கீகரிக்கப்பட்டால் அதற்கு இதைவிட இரட்டிப்பு விலையை நாம் கொடுத்தாக வேண்டும், சீனத் தடுப்பூசிகள் பெரும்பாலான நாடுகளில் செயலாற்றவே இல்லை எனச் சொல்கிறார்கள். இவற்றுடன் எல்லாம் ஒப்பிடும்போது ரூ.400 என்பது மலிவு விலைதான்”என்றார்.
”தடுப்பூசி என்பது பொதுப்பண்டம் அதை எதற்கு விலைக்கொடுத்து வாங்கவேண்டும்?” - பேராசிரியர் ஜோதி சிவஞானம், பொருளாதார வல்லுநர்
நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் 47 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். மேலும் கொரோனா லாக்டவுன் காலத்தின் தனிநபர் வருமானம் என்பது மிகவும் குறைந்துள்ளது. வருமானம் நான்கில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. மூன்றுவேளையும் உணவு என்பது எல்லாருக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் எப்படி ரூ 400-600 கொடுத்து ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளமுடியும்? மேலும் தடுப்பூசி என்பது பொதுப்பண்டம். பொதுப்பண்டத்தை விலைக்கொடுத்துப் போட்டுக்கொள்ளச் சொல்லி அரசே ஊக்கப்படுத்துவது வேதனையளிக்கிறது.
பொதுப்பண்டம் (Public Goods) என்றால் என்ன?
சாலைவசதி, குடிநீர் வசதி என மக்களுக்கான நேர்மறை வெளிப்புறத் தாக்கத்தை(Positive externality factor) ஏற்படுத்தும் எதுவும் அரசு ஊக்குவிக்கும் பொதுப்பண்டமாகிறது. அந்த வகையில் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் அவருக்கு கொரோனா பரவுவதும் அவரிடமிருந்து பிறருக்குப் பரவுவதும் தடுக்கப்படுகிறது. அதனால் தடுப்பூசியும் பொதுப்பண்டமாகிறது.
பொதுப்பண்டத்தை முழுக்கவே இலவசமாக வழங்கவேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. இதைவிடுத்து மக்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் விலையில்லா தடுப்பூசி மற்றவர்கள் விலைகொடுத்தே போட்டுக்கொள்ளவேண்டும், மத்திய அரசின் கொள்முதலுக்கு ஒரு விலை மற்றும் மாநில அரசுகள் தேவைப்பட்டால் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்கிற நிலையில் அதற்குத் தனி நிர்ணயவிலை என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மேலும் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் இதுபோன்ற பொதுப்பண்டங்களின் நன்மை தீமைகளையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள், இந்தச் சூழலில் அரசுதான் குறுக்கிட்டு மக்களுக்கு எப்படி முழுக்க முழுக்க இலவசமாக தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.
”தடுப்பூசிக்கான காப்புரிமையை அரசு ஒட்டுமொத்தமாக விலைகொடுத்துப் பெற்று அதனை மற்ற மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பகிர்ந்து இதற்கான அதிக எண்ணிக்கயிலான உற்பத்தித் தொழிற்சாலைகளை உருவாக்கலாம். அதிக உற்பத்தி இருக்கும் சூழலில் இலவசமாக வழங்குவதும் சாத்தியம். மாறாக அரசே முன்வந்து சீரம் இன்ஸ்ட்டியூட், பாரத் பயோடெக் என ஒவ்வொரு கம்பெனியாக மார்க்கெட் செய்துகொண்டிருப்பது வேதனையளிக்கிறது” என்றார். இந்த நிலையில் அனைத்து மாநிலங்களும் வயதுவரம்பு பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் வலுத்துவருகிறது.
Also Read:கொரோனா தொற்று உறுதியா? இதில் கவனம் செலுத்துங்கள் - மருத்துவர் பிரியா சம்பத்குமார் அட்வைஸ்..