ஸ்டாலின் தேர்வு செய்த நாராயணன் யார்? ஓ... அவர் தானா இது!
தமிழக அரசின் நிதி நிலையை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நாராயண் இடம் பெற்றுள்ள நிலையில் அவரின் செயல்பாடுகளை பலரும் அறிய வேண்டி உள்ளது
![ஸ்டாலின் தேர்வு செய்த நாராயணன் யார்? ஓ... அவர் தானா இது! What is the reason for Narayan's inclusion in the first Economic Advisory Council? ஸ்டாலின் தேர்வு செய்த நாராயணன் யார்? ஓ... அவர் தானா இது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/21/04ef348969b180ea3076d9e250f11424_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
“தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கையாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” இந்த வார்த்தைகள் மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயண் எழுதிய தி திரவிடியன் இயர்ஸ் - பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வார்த்தைகளின் மூலம் தமிழ்நாட்டின் மீது எஸ்.நாராயண்னுக்கு இருக்கும் ஆழமான அரசியல், சமூக, பொருளாதார புரிதல்களை நம்மால் அறிய இயலும்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்ற நாராயண், தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையும், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்பில் பட்டமும் பெற்றவர். டெல்லியில் தனது முனைவர் பட்டத்தை முடித்த நாராயண். 1965ஆம் ஆண்டில் தமிழ்நாடு பிரிவில் இருந்து ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வானவர்.
நாராயண் ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்த 1965ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டமும் அதற்கு பிறகு நடந்த ஆட்சி மாற்றத்தால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதை தி திரவிடியன் இயர்ஸ் புத்தகம் பேசுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டில் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் நாராயண்,
பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்து பொருளாதார கொள்கைகள் அமல்படுத்துதல், நிதி, வர்த்தகம், தொழில், பெட்ரோலியம், வேளாண்மை, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட 30 துறைகளில் பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த உறுதுணையாக இருந்தவர். இதற்கு முன்னாள் மத்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராகவும், வருவாய், பெட்ரோலியம், தொழில்துறை மேம்பாடு மற்றும் நிலக்கரி துறைகளுக்கான செயலாளராகவும் பதவி வகித்த அனுபவம் கொண்ட எஸ்.நாராயண், 2000ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மத்திய அரசின் பட்ஜெட்டை வகுப்பதில் முக்கிய பங்காற்றிய அவர். மேக்ரோ பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதிலும் நாராயண் முக்கிய பங்கு வகித்தார்.
1989 முதல் 1995ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நாராயண் இருந்தபோது, குறு கடன்களை வழங்கும் குழுக்களை அமைத்தார். தற்போது இந்த குழுக்கள் 3 லட்சம் பேரை கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது. சமூகவியல், நீர்மேலாண்மை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு சுயவேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிலையான திட்டங்களை செயல்படுத்த காரணமாக இருந்தவர். தற்போது இந்தியாவில் உள்ள மிக முக்கிய தனியார் நிறுவனங்களான அப்போலோ டயர்ஸ், கோத்ரேஜ், சேஷாயி காகித நிறுவனம், அவிவா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
தமிழக அரசின் கடன் சுமை 5.6 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அதனை சரி செய்ய எஸ்.நாராயணின் பொருளாதார அனுபவமும் நிதிமேலாண்மை திறனும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிகம் கைக்கொடுக்கும் என நம்பலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)