Villupuram: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு - குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை..!
Villupuram: விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதால் மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம்: கள்ளச்சாராயம் அருந்தி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் இதுவரை 9 பேர் இறந்துள்ளதாகவும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கள்ளச்சாராயத்தினை தடுக்க தவறிய 7 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன், கள்ள சாராயம் குடித்து இறந்தவர்கள் குறித்த வழக்கில் குற்றவாளி அமரன் என்ற மாற்றுதிறனாளியை கைது செய்துள்ளதாகவும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கபட்டுளல்தாகவும் கள்ள சாராயத்தினை பரிசோதனை செய்ததில் தொழிற்சாலைகளில் பயன்படுத்த கூடிய மெத்தனால் விஷ சாராயம் என்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.
இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் விஷ சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் விஷ சாராயத்தினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். விஷ சாராய விற்பனை தடுக்க தவறிய விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் ஆய்வாளர்கள் 2 மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் 2 என 4 பேரும் செங்கல்பட்டில் காவல் ஆய்வாளர் ஒருவர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் இருவர் என 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக்கில் வாங்கி அருந்திய மதுவினால் உயிரிழந்ததாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சாராய வழக்குகள் 4035ம் 2022 ஆம் ஆண்டு 4000 வழக்குகளும் 2023 ஆம் ஆண்டு இதுவரை 2135 வழக்குகள் பதிய பட்டுள்ளதாக ஐ ஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.